மகாராஷ்டிரத்தில் புதிய அரசு அமைப்பதில் ஏற்பட்ட சிக்கல் தீரும் விதமாக, சிவசேனா மீண்டும் பாஜக பாசறைக்குத் திரும்பியுள்ளது. தீபாவளி முடிந்த உடன் மாநிலத்தில் புதிய ஆட்சி அமைப்பதில் தங்களுக்கு உரிய பங்கு குறித்தி விரிவான திட்டங்களுடன் பாஜக தலைவர்களைச் சந்தித்துப் பேச இருப்பதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. அரசில் பங்கேற்றாலும், தங்களுக்கு உரிய அதிகாரப் பங்களிப்பு இருக்க வேண்டும் என்றும் அக்கட்சி கூறியுள்ளது.
சிவசேனை மூத்த தலைவர்கள் சுபாஷ் தேசாய், அனில் தேசாய் ஆகியோர் செவ்வாய்க்கிழமை தில்லியில் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பாஜக தலைவர்களைச் சந்தித்துப் பேசினர். பின்னர் புதன் கிழமை சிவசேனைக் கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேயின் மாதோஸ்ரீ இல்லத்தில் கூடி, ஆலோசனை நடத்தினர். முன்னதாக பாஜக தலைவர் தர்மேந்திர பிரதான் உடன் பேச்சு நடத்தி, பாஜகவுக்கான தங்களது ஆதரவு குறித்து உறுதி செய்தனர்.
இது குறித்து சுபாஷ் தேசாய் கூறுகையில், “பாஜகவுக்கு ஆதரவு அளிக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். பாஜக.,தலைவர்களுடன் சுமுகமான முறையில் பேச்சு நடைபெற்றது. திங்கள் முதல் கட்சியினருடன் விரிவான ஆலோசனை நடத்தி அரசு அமைவது குறித்துப் பேசுவோம்” என்று கூறியுள்ளார்.
123 உறுப்பினர்களுடன் தனிப்பெரும் கட்சியாக உள்ள பாஜகவுக்கு, அரசு அமைப்பதில் நிபந்தனையற்ற ஆதரவு அளிப்போம் என்று தேசியவாத காங்கிரஸ் அறிவித்த பின்னர், பாஜகவுடன் 25 ஆண்டுகளாக கூட்டணியில் ஒரே முகாமில் இருந்த சிவசேனைக் கட்சி தீவிரமாக யோசிக்கத் துவங்கியது. மகாராஷ்டிர சட்டசபையில் இரண்டாவது பெரிய கட்சியாக 63 உறுப்பினர்களைக் கொண்ட சிவசேனையில் இது குறித்து கருத்து வேறுபாடுகளும் எழுந்தன. கட்சியின் ஒரு தரப்பு உறுப்பினர்கள், பாஜகவுக்கு வெளியில் இருந்து ஆதரவு தரலாம் என்று தங்கள் யோசனையைத் தெரிவித்தனர். இன்னொரு தரப்போ, ஆட்சியில் பங்கேற்பது என்று முடிவு கூறினர். இந்நிலையில், தில்லியில் சிவசேனைக் கட்சித் தலைவர்கள் பாஜக உயர்மட்டத் தலைவர்களைச் சந்தித்துப் பேசிய பின்னர், கட்சிக்குள் ஒருமித்த கருத்து எழுந்துள்ளது. அனைத்து உறுப்பினர்களுமே, பாஜக அரசில் பங்கேற்பது என்றும், மீண்டும் பாஜகவுடன் கூட்டணியில் இணைவது என்றும் முடிவு செய்தனர்.
இருப்பினும், சிவசேனைத் தலைவர்கள் பாஜகவுடன் கொஞ்சம் கடினமான கோரிக்கைகளை வைத்து, பேரம் பேசுவது என்றும், தீபாவளி முடிந்தபின்னர் நடைபெறும் பேச்சுவார்த்தைகளின் போது, அதனை வெளிப்படுத்துவோம் என்றும் கூறியுள்ளனர்.
இதுகுறித்து சிவசேனை எம்.பி., கஜானன் கீர்த்திகார் கூறும்போது, “பாஜகவுக்கு நாங்கள் திரும்பியதில் மகிழ்ச்சி. ஆனால் எங்களுக்கு உரிய மரியாதையை அக்கட்சி தரவேண்டும். அரசில் உரிய அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இதனிடையே பாஜக.,வோ சிவசேனையிடம் இருந்து நிபந்தனையற்ற ஆதரவை எதிர்பார்க்கிறது. சிவசேனைத் தலைவர்கள் பாஜக., உயர்மட்டத் தலைவர்களைச் சந்தித்தபோது, ஒரு விஷயத்தை அவர்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளனர். “முதலில், சேனாவிடம் இருந்து நிபந்தனையற்ற ஆதரவை பாஜக எதிர்பார்க்கிறது. அடுத்தது, மகாராஷ்ட்ரத்தில் தங்களது மிகப்பெரிய மூத்த சகோதரன் பாஜக என்பதை சிவசேனை ஏற்றுக் கொள்ள வேண்டும். அரசில் பங்கு குறித்து பேச்சு எழும்போது, புதிய சூத்திரமான 2:1 என்ற விகிதாச்சாரத்தை அது ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்பதை முன்வைத்தார்களாம். மேலும் மாநிலத்தில் 14 அமைச்சர்கள், மத்தியில் கூடுதலாக ஒரு அமைச்சர் என்ற யோசனையும் பேசப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. சிவசேனையின் சார்பில் மத்தியில் ஆனந்த் கீதே மட்டுமே அமைச்சராக உள்ளார்.
தற்போது, பாஜக., சிவசேனை இரு கட்சிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை தொடர்ந்து கொண்டுள்ளது. தீபாவளிக்குப் பிறகே மகாராஷ்டிரத்தில் அமையும் புதிய அரசு குறித்து தெளிவாகத் தெரியும்.