கர்நாடக வனப்பகுதியில் சுடப்பட்ட சம்பவத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர் உடல் கண்டெடுப்பு: சோதனைச் சாவடிக்கு தீ வைப்பு; பதற்றம்

dalit_indiaசேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கோவிந்தபாடி பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜா (32), செட்டிப்பாடியைச் சேர்ந்த பழனி (40), நெட்டைக்காளன்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த முத்துசாமி (35) மூவரும் கடந்த 21ஆம் தேதி அன்று இரவு வனப்பகுதியில் சென்றனர் மாதேஸ்வரன் மலை வனப் பகுதிக்குள் சென்றனர். அவர்கள் வேட்டையாடவே மாதேஸ்வரன் வனப்பகுதிக்குள் வந்ததாக கர்நாடக மாநில வனத்துறையினர் கூறுகின்றனர். ஆனால், இந்தப் பகுதி மக்கள், இம்மூவரும் பாலாற்றில் மீன் பிடிக்க வலை விரித்திருந்ததாகவும், அதனை எடுக்கப் போனதாகவும் கூறுகின்றனர்.

கர்நாடக வனத்துறைப் பகுதியில் இவர்கள் மூவரும் சென்றிருந்த போது, மாதேஸ்வரன் வனப்பகுதி உதவி வன அலுவலர் நாகராஜ் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் மூவரையும் நோக்கி துப்பாக்கியால் சுட்டதில், ராஜா, முத்துசாமி ஆகியோர் தப்பி வந்து கிராமத்தினரிடம் தகவலைக் கூறியுள்ளனர்.

வன அலுவலர் சுட்டதில், ராஜாவுக்கு காலில் குண்டு காயம் ஏற்பட்டது. சுடப்பட்டதில் உடன் வந்த பழனி என்பவரைக் காணவில்லை என்று கூறினர். இது நேற்று மாலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் நேற்று முதல் ஊர் மக்கள் பழனியைத் தேடினர்.

இந்நிலையில், அடிப்பாலாறு பகுதியில், ஆற்று நீரீல் பழனியின் சடலம் கிடந்தது இன்று கண்டுபிடிக்கப்பட்டது. பழனியின் உடலில் கொடூரமான வெட்டுக் காயம் இருந்துள்ளது. உடல் பாதி உருக்குலைந்த நிலையில் கிடந்தது. இதனைக் கண்ட மக்கள் தெரிவித்த தகவல் அடிப்படையில், மக்கள் பெருமளவில் அங்கே குவிந்தனர். சடலத்தை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சடலம் கிடந்த பகுதி கர்நாடக மாநிலத்தின் பகுதி என்றும், அடிப்பாலாற்றின் அக்கரைப் பகுதி என்பதால், கர்நாடக மாநில போலீஸார்தான் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று சேலம் போலீஸார் கூறினர்.

இந்நிலையில், ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் கூடி, கர்நாடக மாநில எல்லையில் திரண்டு, அங்கிருந்த கர்நாடக மாநில எல்லைப் புறச் சோதனைச் சாவடியை அடித்து உடைத்து எரித்தனர்.

இதனால் அங்கே கூடுதலாக போலீஸார் குவிக்கப்பட்டனர். இது, தொடர்ந்து இரு மாநில எல்லைப் பிரச்னையாக மாறியது. இந்நிலையில் சேலம் போலீஸார் சக்திவேல் தலைமையில் பாதுகாப்பில் ஈடுபட்டனர். இதை அடுத்து தமிழக கர்நாடக போக்குவரத்து நிறுத்தப் பட்டது. மாதேஸ்வரன்மலை வழியாகச் செல்லும் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது.

TAGS: