தமிழகம் முழுவதும் பலத்த மழை நீடிப்பு: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

floodedசென்னை, அக். 24- தமிழ்நாடு முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழை கடந்த 1 வாரமாக நீடிக்கிறது.

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே பவானி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடிகிறது. இன்று 11-வது நாளாக இந்த நிலை நீடிக்கிறது. இதனால் மேட்டுப்பாளையம், பவானி ஆற்றுப்பாலம் அருகே உள்ள பவானி அம்மன் கோவில், மற்றும் விளையாட்டு மாரியம்மன் கோவில்களை வெள்ளம் சூழ்ந்து நிற்கிறது.

ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்தால்தான் இந்த கோவில்களுக்கு செல்ல முடியும் என்ற நிலை காணப்படுகிறது. பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, வருவாய்த்துறை மூலம் ஆற்றின் கரையோரப்பகுதி மக்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

மாவட்டம் முழுவதும் பல பகுதிகளில் இன்றும் மழை நீடிக்கிறது. ஊட்டி, குன்னூர் பகுதிகளில் அடர்த்தியான மேகமூட்டம் நிலவுவதால் வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டவாறு செல்கின்றன. தொடர் மழை காரணமாக ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டு அச்சுறுத்தி வருகிறது. நேற்று நண்பகல் 12 மணி அளவில் ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு 150 பயணிகளுடன் மலை ரெயில் புறப்பட்டது.

குன்னூர், ஹில் குரோவ், அடர்லி ஆகிய பகுதிகளை கடந்து கல்லாறு என்ற இடத்தில் ரெயில் வந்தது. அப்போது ரெயில் பாதையில் ராட்சத பாறை மற்றும் மண் சரிந்து தண்டவாளம் மூடப்பட்டு கிடந்ததை ரெயில் டிரைவர் பார்த்தார். இதனால் உடனடியாக மலை ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பொன்னிவாடி ஊராட்சியில் நல்லதங்காள் அணை அமைந்துள்ளது. நல்லதங்காள் அணையின் அருகே உள்ள கோனேரிபட்டியில் தண்ணீர் ஊருக்குள் புகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் பல குளங்கள் நிரம்பியுள்ளன. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையினால் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. குமரி மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

திருவட்டார் பகுதியில் நேற்று மாலையிலும் பலத்த மழை கொட்டி தீர்த்தது. நாகர்கோவிலில் பெய்த மழை கனமழையினால் மகளிர் கிறிஸ்தவக்கல்லூரி சாலை, கோட்டார், செட்டிக்குளம் பகுதிகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. பாசன குளங்களும் வேகமாக நிரம்பி வருவதால் பொதுப் பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் அதை கண்காணித்து வருகிறார்கள்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்து உள்ளது. தொடர்மழையால் மண் சுவர்களாலான வீடுகள், பலத்த காற்றுக்கு வீடுகளின் மேற்கூரைகள் இடிந்தது. கீரனூரில் அய்யம்பெருமாள் (49), பூமிநாதன் (51), முதுகுளத்தூர் யாதவர் வாகைக்குளம் கோவிந்தராஜ் (54) ஆகிய 3 பேரின் வீடுகள், பின்பக்க சுவர்கள் இடிந்து விழுந்ததில், சமையல் பொருட்கள், பீரோக்கள் சேதமடைந்து நாசமானது.

வெங்கல குறிச்சியில் வீடு இடிந்து விழுந்ததில் நீலமேகம், அவரது மனைவி பாண்டியம்மாள் (35), இவர்களது குழந்தைகள் திவ்யஸ்ரீ (7), ஜனனிபிரியா (4) ஆகிய நால்வரும் காயமடைந்தனர். கடலூரில் நேற்று இரவு விட்டு விட்டு மழை பெய்தது. வடலூர், நெய்வேலி, பண்ருட்டி, விருத்தாசலம், புவனகிரி குறிஞ்சிப்பாடி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதே நீலை நீடித்தது.

கடலூர் பகுதியில் நேற்று முதல் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் பைபர், நாட்டு படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடிக்க 2-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை. பரங்கிப்பேட்டை பகுதிகளிலும் கடல் தொடர்ந்து கொந்தளிப்பாக உள்ளது.

மரக்காணம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. 7-வது நாளாக இன்று காலையிலும் மழை கொட்டியது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் ரோட்டில் தண்ணீர் பெருகி ஓடுகிறது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கி உள்ளது. குளங்கள் நிரம்பி வருகின்றன. மரக்காணம் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கர் உப்பளங்கள் உள்ளன. தொடர்ந்து பெய்த மழையால் உப்பளங்கள் மூழ்கி உள்ளன.

TAGS: