சீன எல்லையில் 54 புதிய ராணுவச் சாவடிகள்: இந்தியா அறிவிப்பு

  • உத்தரப் பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படையின் நிறுவன தினத்தையொட்டி அளிக்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
  • உத்தரப் பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படையின் நிறுவன தினத்தையொட்டி அளிக்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.

“”சீனாவையொட்டிய அருணாசலப் பிரதேச மாநில எல்லையில் 54 புதிய ராணுவச் சாவடிகள் அமைக்கப்படும்; ரூ.175 கோடி செலவில் உள்கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும்” என்று இந்தியா வெள்ளிக்கிழமை அறிவித்தது.

அருணாசலப் பிரதேச எல்லைப் பகுதியில், சாலைப் பணிகளை இந்தியா மேற்கொள்வதற்கு சீனா எதிர்ப்புத் தெரிவித்திருந்த நிலையில், இந்தியா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து, உத்தரப் பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படையின் 53-ஆவது நிறுவன தின நிகழ்ச்சியில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:

அமைதிக்காக கௌரவத்தை விட்டுக் கொடுக்க முடியாது: எல்லை நிலவரம் குறித்து சிந்திக்கும்போது, அது பாகிஸ்தானின் அத்துமீறலாக இருந்தாலும் சரி, சீனாவின் ஆக்கிரமிப்பாக இருந்தாலும் சரி, எனக்கு வேதனையைத் தருகிறது. கௌரவத்துடன் கூடிய அமைதி வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது. அமைதிக்காக கௌரவத்தை விட்டுக் கொடுக்க முடியாது.

கௌரவமே, மனித குலத்தின் மிக உயர்ந்த லட்சியமாகும். சீனாவையொட்டிய அருணாசலப் பிரதேச எல்லையில் இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படைக்காக 54 புதிய சாவடிகள் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. சீனாவையொட்டிய அருணாசலப் பிரதேச எல்லையில் ரூ.175 கோடி செலவில் உள்கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

நமது அண்டை நாடுகள் அனைத்துடனும் அமைதியையான உறவையே இந்தியா விரும்புகிறது. எல்லைப் பிரச்னைகள் அனைத்தையும் அமைதியான வழிமுறைகளிலேயே தீர்த்துக் கொள்ள இந்தியா விரும்புகிறது. அது பாகிஸ்தானாக இருந்தாலும் சரி, சீனாவாக இருந்தாலும் சரி. இதை நமது பிரதமர் நரேந்திர மோடி ஏற்கெனவே தெளிவாகத் தெரிவித்துள்ளார்.

“உலகம் ஓரு குடும்பம்’ என்பதைக் குறிக்கும், “வசுதைவ குடும்பகம்’ என்ற தத்துவத்தின் மீது இந்தியா நம்பிக்கை வைத்துள்ளது. அதுகுறித்து உலகத்துக்கு இந்தியா எடுத்துரைத்து வருகிறது.

இந்தியா வந்த சீன அதிபர் ஜீ ஜின்பிங்கிடம், ஏதாவது பிரச்னை இருந்தால் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இருப்பினும், எல்லை தொடர்பாக சீனா அடிக்கடி கேள்வி எழுப்பி வருகிறது. இந்தியப் பகுதிக்குள் சாலையை மேம்படுத்த நமது நாடு விரும்பியபோது, தனது ஆட்சேபத்தை சீனா தெரிவித்தது.

இந்தியாவையொட்டிய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் சீனா புதிதாக விமானதளம், ராடார் கருவிகளை நிறுவி வருவதாக வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து தற்போது எதுவும் தெரிவிக்க இயலாது. எல்லை விவகாரம் தொடர்பான அனைத்துப் பிரச்னைகளுக்கும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காணப்படும் என்பதை மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தாக்குதலை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும்: தீபாவளிப் பண்டிகைக்கு முந்தைய தினத்தில், ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லையில் உள்ள கிராமங்கள் மீது பாகிஸ்தான் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. நமது பண்டிகை தினத்திலும் தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் நிறுத்தவில்லை. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கை, நம்மை வேதனைப்படுத்துகிறது. மேலும் ஆத்திரமூட்டும் வகையில் இருக்கிறது.

ஆகையால், எல்லையில் உள்ள ராணுவச் சாவடிகள், கிராமங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ள வேண்டும். ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா. சபையின் கவனத்துக்கு பாகிஸ்தான் எடுத்துச் சென்றது அதிருப்தியளிக்கிறது. அந்த விவகாரத்துக்கு இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலமே தீர்வுகாண வேண்டும் என்றார் அவர்.

இந்தியா அத்துமீறவில்லை: அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லையில் இந்தியா அத்துமீறித் தாக்குதல் நடத்தவில்லை. எல்லையில் அமைதி நிலவுவதையே இந்தியா விரும்புகிறது. கடந்த இரு நாள்களாக எல்லையில் பாகிஸ்தான் தரப்பில் இருந்தே மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு வருகிறது.

இந்திய எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படையின் பணி பாராட்டத்தக்கது. அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து தரும் என்றார் ராஜ்நாத் சிங்.

TAGS: