தமிழக மீனவர் சுட்டுக் கொலை: கர்நாடக வனத் துறை சோதனைச் சாவடிக்கு தீ வைப்பு

  • கர்நாடக எல்லையில் உள்ள வனத் துறை சோதனைச் சாவடி அருகில் உள்ள பொருள்களைச் சேதப்படுத்திய கிராம மக்கள்.
  • கர்நாடக எல்லையில் உள்ள வனத் துறை சோதனைச் சாவடி அருகில் உள்ள பொருள்களைச் சேதப்படுத்திய கிராம மக்கள்.

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே பாலாறு வனப் பகுதியில் நடமாடிய தமிழக மீனவர்கள் மீது கர்நாடக வனத் துறையினர் சில நாள்களுக்கு முன்பு துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவத்தின்போது காணாமல் போன தமிழக மீனவர் வெள்ளிக்கிழமை சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த கர்நாடக எல்லையோரம் வசிக்கும் தமிழக கிராம மக்கள், அந்த மாநில வனத் துறை சோதனைச் சாவடி மீது தாக்குதல் நடத்தினர். இதனால், இரு மாநில எல்லையில் பதற்றம் நிலவுகிறது.

மேட்டூர் அருகே தமிழக- கர்நாடக எல்லையில் உள்ள கோவிந்தப்பாடி, செட்டிப்பட்டி உள்ளிட்ட மலைக் கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் பாலாறு, காவிரி ஆற்றில் மீன் பிடிப்பது வழக்கம். கடந்த 21-ஆம் தேதி, கோவிந்தப்பாடியைச் சேர்ந்த ராஜா (42), செட்டிப்பட்டியைச் சேர்ந்த பழனி (40), நெட்டைகாலன் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி உள்ளிட்டோர், கர்நாடக மாநில எல்லைக்குள்பட்ட பாலாறு பகுதிக்கு மீன் பிடிக்கச் சென்றதாகவும், அவர்கள் மீது கர்நாடக வனத் துறையினர் துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது.

இதில், ராஜா, முத்துசாமி, பழனி ஆகியோருக்கு குண்டுக் காயங்கள் ஏற்பட்டதாகவும், அவர்களில், ராஜா, முத்துசாமி ஆகியோரை உடன் வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கொளத்தூருக்கு கொண்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. பழனியின் நிலை குறித்து அவர்கள் எதுவும் தெரிவிக்கவில்லையாம்.

இதுகுறித்து, பழனியின் உறவினர்கள் கொளத்தூர் போலீஸில் தெரிவித்தனர். இந்த நிலையில், அடிப்பாலாறு வனப் பகுதியில் ஆற்றில் பழனியின் உடல் மிதப்பது வெள்ளிக்கிழமை தெரிய வந்தது. அவரது உடலில் துப்பாக்கிக் குண்டு காயங்களும், பல இடங்களில் வெட்டுக் காயங்களும், மர்ம உறுப்பு சிதைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் பரவியது.

சோதனைச் சாவடிகள் எரிப்பு: இதனால், ஆத்திரமடைந்த தமிழக கிராம மக்கள், தமிழக- கர்நாடக எல்லையில் மேட்டூர்- மாதேஸ்வரன் மலை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

மேலும், பாலாறு பகுதியில் உள்ள கர்நாடக வனத் துறையினரின் இரு சோதனைச் சாவடிகளையும் அடித்து நொறுக்கி, தீ வைத்துக் கொளுத்தினர். மேலும், சோதனைச் சாவடியில் இருந்த வயர்லெஸ் சாதனங்கள், பைக், ஆண்டெனா உள்ளிட்டவற்றை எரித்தும், உடைத்தும் சேதப்படுத்தினர்.

வாகனங்கள் நிறுத்தம்: இதையடுத்து, இரு மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து உள்ளிட்ட அனைத்து வகையான போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டன. தமிழக வாகனங்கள் கொளத்தூரிலும், கர்நாடக மாநில வாகனங்கள் மாதேஸ்வரன் மலையிலும் நிறுத்தப்பட்டன.

தகவலறிந்த தமிழக, கர்நாடக அதிகாரிகளும், போலீஸாரும் பாலாறு பகுதிக்கு விரைந்தனர்.

தமிழகக் கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்டோர் பழனியின் சடலத்தை எடுக்க விடாமல் காவல் துறையினரைத் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பல மணி நேரம் தொடர்ந்த இந்தப் போராட்டம், பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, மாலை 6 மணிக்கு பிறகு விலக்கிக் கொள்ளப்பட்டது.

இதையடுத்து, பழனியின் சடலத்தை மீட்ட கர்நாடகக் காவல் துறையினர், அதை பிரேதப் பரிசோதனைக்காக மைசூரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்குப் பிறகே பழனி சுட்டுக் கொல்லப்பட்டாரா, அவர் வனத் துறையினரால் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டாரா என்பது தெரிய வரும்.

எல்லையில் பதற்றம்: இந்தச் சம்பவத்தை அடுத்து இரு மாநில எல்லையிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது. மேலும், போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவிந்தபாடி பொதுமக்கள் கூறுகையில், பழனி உள்ளிட்ட மீனவர்கள் பாலாற்றில் ஏற்கெனவே விரிக்கப்பட்ட வலையை எடுப்பதற்காகச் சென்ற போது, கர்நாடக வனத் துறையினர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில், பழனியைக் காயங்களுடன் மீட்டு, அருகில் இருந்து சுட்டும், அரிவாளால் வெட்டியும் துன்புறுத்துதல் செய்து ஆற்றில் வீசியுள்ளனர் என்றனர்.

கர்நாடக வனத் துறை தரப்பில் கூறுகையில், பழனி உள்ளிட்டோர் மலை மாதேஸ்வரா வனப் பகுதியில் மான் வேட்டைக்கு வந்தனர். ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த வனத் துறை அதிகாரிகளைக் கண்டதும் அவர்கள் தங்களிடம் இருந்த துப்பாக்கியால் வனத் துறையினரை நோக்கிச் சுட்டனர்.

வனத் துறையினர் பதில் தாக்குதல் நடத்தியதில், பழனி இறந்துள்ளார். வேட்டைக் கும்பலிடம் இருந்து சுமார் 35 கிலோ மான் கறி மீட்கப்பட்டது என்றனர்.

தலைமறைவாக உள்ள ராஜா, முத்துசாமி ஆகிய இருவரும் திரும்பி வந்தால் மட்டுமே வனப் பகுதியில் நடந்தது என்ன என்பது தெரிய வரும். எனவே, அவர்கள் இருவரையும் தேடி வருவதாக தமிழகக் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

விசாரணைக்கு உத்தரவு

பாலாறு வனப் பகுதியில் கர்நாடக வனத் துறையினர் துப்பாக்கியால் சுட்டச் சம்பவத்தில் தமிழக மீனவர் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த கர்நாடக அரசு உத்தரவிட்டது.

பாலாறு வனப் பகுதியில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தி 48 மணி நேரத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், இதற்காக வனத் துறையின் உயர்நிலைக் குழுவை அமைக்கவும் கர்நாடக அரசின் கூடுதல் முதன்மைச் செயலர் மதன் கோபால் அந்த மாநில அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதற்கிடையே, கர்நாடக வனத் துறை சோதனைச் சாவடியில் துப்பாக்கிகள் இருந்ததாகவும், அவற்றை தமிழகக் கிராம மக்கள் கொள்ளையடித்துச் சென்றுவிட்டதாகவும் வனத் துறை ஊழியர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்தும் விசாரணை நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.

TAGS: