மகாராஷ்டிர மாநிலம், அஹமத்நகர் மாவட்டத்தின் ஜாஹிதி கல்சா கிராமத்தில் தலித் குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, அவர்களின் உடல்கள் வறண்ட கிணற்றுக்குள் வீசியெறியப்பட்டன.
இதுகுறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் லட்சுமி கெளதம் கூறியதாவது:
ஜாஹிதி கல்சா கிராமத்தின் பதேர்டி பகுதியில் சஞ்சய் ஜாதவ் (49), அவரது மனைவி ஜெயஸ்ரீ (46), அவர்களது மகன் சுனில் (20) ஆகியோர் கடந்த 20ஆம் தேதி மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டனர். அவர்களின் உடல்கள் அந்தப் பகுதியிலுள்ள வறண்ட கிணற்றில் இருந்து மறுநாள் (அக்டோபர் 22) மீட்கப்பட்டன.
எனினும் சுனிலின் தலை, கை, கால்கள் காணாமல் போயிருந்தன. இதையடுத்து அந்தப் பகுதியில் திரண்ட சஞ்சய் ஜாதவின் உறவினர்கள் சாலைகளில் தடுப்புகளை ஏற்படுத்தியதுடன், கொலையின் பின்னணியில் உயர் ஜாதியினர் உள்ளதாக சந்தேகப்படுவதாகவும், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினர் என்று லட்சுமி கெளதம் தெரிவித்தார்.
இந்நிலையில், காணாமல் போன சுனிலின் தலை, கை, கால் உறுப்புகள் எரிந்த நிலையில் அந்தப் பகுதியிலுள்ள ஆழ்துளை கிணற்றுப் பகுதியில் வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் அனில் கவாடி தெரிவித்தார்.