குழந்தைகள் இறப்பை தடுக்க மோடி வேண்டுகோள்

modமும்பை : மும்பையில், முகேஷ் அம்பானியின், ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனம் சார்பில் செயல்பட்டு வரும் பழமையான, ‘எச்.என்.ரிலையன்ஸ் பவுண்டேஷன்’ மருத்துவமனை, ஏராளமான பொருட ்செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, நேற்று நடந்த விழாவில், பிரதமர் மோடி பேசியதாவது: வெளிநாடுகளில் வசிக்கும் மக்களுக்கு கிடைக்கும் மருத்துவ வசதிகளை ஒப்பிடும்போது, நம் நாட்டில் உள்ள ஏழைகளுக்கு, மிகக்குறைவான மருத்துவ வசதி தான் கிடைக்கிறது. மத்திய அரசால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள, ‘மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா’ திட்டங்களை தீவிரமாக பிரசாரம் செய்வதன் மூலம், ஏழைகளுக்கான சுகாதார திட்டங்களை மேம்படுத்த முடியும்.

துாய்மையான தண்ணீரை குடித்தால், பல்வேறு நோய்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியும். நான் குஜராத் முதல்வராக இருந்தபோது, சபர்மதி ஆற்று நீரை துாய்மையாக்கி, ஆமதாபாத் மக்களின் குடிநீர் தேவையை தீர்த்து வைத்தேன். பாகிஸ்தானில் குழந்தைகள் அதிகமாக இறக்கின்றன. இதற்கு காரணம் என்ன தெரியுமா? அங்குள்ள பெரும் பாலான குழந்தைகள் சாப்பிடுவதற்கு முன், கை கழுவுவது இல்லை. நம் நாட்டிலும் இதுபோன்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது.

பச்சிளம் குழந்தைகள் இறப்பு, தற்போது அதிகமாக உள்ளது. ஆழ்துளை கிணற்றுக்குள் ஒரு குழந்தை விழுந்தால், ஒட்டு மொத்த நாட்டு மக்களும், ‘டிவி’ முன் அமர்ந்து, அதிர்ச்சியுடன் அதை பார்க்கின்றனர். ஆனால், போதிய மருத்துவ வசதி கிடைக்காமல், நாடு முழுவதும், நுாற்றுக்கணக்கான குழந்தைகள் இறக்கின்றன.

மருத்துவ சிகிச்சைக்கும், நோய்களை கண்டறிவதற்கும் தேவையான கருவிகளை, அதிக அளவில் தயாரிக்க வேண்டும். இதற்காக, வெளிநாட்டுநிறுவனங்கள் இந்தியாவுக்கு வந்தால், அதை மத்திய அரசு வரவேற்கும். இந்த துறையில், அன்னிய முதலீடு வருவதை நான் வரவேற்கிறேன். ரிலையன்ஸ் மருத்துவமனை போன்ற மருத்துவமனைகள், மருத்துவ வசதி அதிகம் கிடைக்காத பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு உதவ வேண்டும். ‘டெலிமெடிசின்’ முறை மூலம், அந்த மக்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்க வேண்டும், என்றார்.

TAGS: