செட்டிபட்டி பழனி சுட்டுக்கொலை; மையப் புலனாய்வு விசாரணை கோரி 30ல் திருமா ஆர்ப்பாட்டம்

Thirumaவிடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை:

’’சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே செட்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்த பழனி என்ற இளைஞர் கர்நாடக வனத் துறையினரால் துப்பாக்கியால் சுடப்பட்டுப் பலியாகியிருக்கிறார்.  அவருடன் மேலும் இரண்டு தமிழ் இளைஞர்கள் கர்நாடக வனத்துறையினரின் தாக்குதலால் படுகாயமடைந்துள்ளனர்.

கர்நாடக எல்லையோரத்தில் கடந்த கால் நூற்றாண்டு காலமாகவே தமிழ் மக்களுக்கெதிரான அரச வன்கொடுமைகள் நடந்து வருகின்றன.  வீரப்பனைத் தேடுகிறோம் என்கிற பெயரில் கர்நாடக எல்லையோரத்தில் உள்ள தமிழ் மக்களின் குடியிருப்புகள் குறிவைத்துத் தாக்கப்படுவதும் அப்பாவி மக்கள் வேட்டையாடப்படுவதும் படுகொலைகளை செய்யப்படுவதும் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன.  வீரப்பன் கொல்லப்பட்ட பிறகும் ஏழை எளிய தமிழ் மக்களை வேட்டையாடுவது நீடித்துக்கொண்டிருக்கிறது.  அந்த வகையில்தான் தற்போது செட்டிபட்டி பழனி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.

தமிழ் மக்களுக்கெதிரான கர்நாடக அரசின் இந்த வன்முறை வெறியாட்டத்தை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிக்கிறது.  செட்டிபட்டி பழனியைப் படுகொலை செய்த கர்நாடக வனத்துறை அதிகாரிகளை உடனடியாக கொலைவழக்கில் கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய அரசை விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது.

படுகொலை செய்யப்பட்ட பழனியின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ. 25 இலட்சம் இழப்பீடு வழங்குவதுடன் அவருடைய குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டுமெனவும், படுகாயம் அடைந்த இளைஞர்களின் குடும்பத்திற்கும் அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறது.  பழனி படுகொலை வழக்கை மையப் புலனாய்வு விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமென இந்திய அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் வேண்டுகோள் விடுக்கிறது.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி 30-10-2014 அன்று விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் ஈரோட்டில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.  எனது தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் மட்டுமின்றி பொறுப்புணர்வுள்ள அமைப்புகளைச் சார்ந்தவர்களும் பொதுமக்களுக்கும் திரளாகப் பங்கேற்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்.’’

TAGS: