இலங்கை – சீன உறவு இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: பழ. நெடுமாறன்

nedumaran_001இலங்கை-சீன உறவால் இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்தார்.

தஞ்சாவூரில் திங்கள்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

இலங்கையில் கொழும்பு துறைமுகத்தில் சீனாவின் 3 நீர்முழ்கி கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன. சிங்கள ராணுவத்துக்கு சீனாவிலும், சீன ராணுவத்துக்கு சிங்களத்திலும் பயிற்சியளிக்கப்படுகிறது. கிரிமினல் குற்றங்களில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த 20 ஆயிரம் சீனக் கைதிகள் விடுதலை  செய்யப்பட்டு, அவர்கள் இலங்கையில் நடைபெறும் கட்டுமானப் பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

குறிப்பாக, அவர்கள் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் தான் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்படி தமிழர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ள இலங்கை அரசின் செயலைக் கண்டிக்கிறோம்.

மற்ற மாநிலங்கள் உருவான நாளை அந்தந்த மாநிலங்களின் மக்களும், அரசும் கொண்டாடி வருகின்றனர். அதேபோல, தமிழகம் உருவான நவம்பர் 1-ஆம் தேதியையும் அரசும், மக்களும் கொண்டாட வேண்டும். இலங்கையை இந்தியாவுக்கு எதிரான தளமாக பயன்படுத்தும் நோக்கத்தில் சீனா செயல்பட்டு வருகிறது. அதற்கு இடம் கொடுக்கக் கூடாது என்று இலங்கையை இந்தியா தாஜா செய்து வருகிறது. ஆனால் அது பலிக்காது. ஏனென்றால் இலங்கையில் சீனாவின் பிடி இறுகிவிட்டது. இதனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

கர்நாடகா, ஆந்திரா எல்லைகளில் மீன்பிடிக்கும் தமிழர்கள் அந்தந்த மாநிலத்தவரால் தாக்கப்படுகின்றனர். ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுகின்றனர். இதையெல்லாம் தடுக்காமல் தமிழக அரசும், மத்திய அரசும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. தமிழர்களை இந்தியர்களாக மத்திய அரசு பார்க்கவில்லை. இதை தமிழர் தேசிய முன்னணி வன்மையாக கண்டிக்கிறது என்றார் நெடுமாறன்.

பேட்டியின்போது தமிழர் தேசிய முன்னணியின் மாநில துணைத் தலைவர் கி.த. பச்சையப்பன், மாநில பொதுச் செயலர்கள் சி. முருகேசன், சதா. முத்துகிருட்டிணன், தஞ்சாவூர் மாவட்டத் தலைவர் பொன். வைத்தியநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.

TAGS: