அருணாச்சல்லில் எல்லைச்சாவடி அமைக்கும் இந்தியாவின் திட்டத்திற்கு சீனா எதிர்ப்பு

arunachalபுதுடில்லி: அருணாச்சல பிரதேசத்தில், 54 புதிய எல்லைச்சாவடி அமைக்கும்இந்தியாவின் திட்டத்திற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது இரு நாடுகளுக்கு இடையிலான எல்லைப்பிரச்னையை மிகவும் சிக்கலாக்கிவிடும் என கூறியுள்ளது.

இது தொடர்பாக சீன வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் கூறுகையில், எல்லைப்பிரச்னையில், சீனாவில் நிலை தெளிவாக உள்ளது. விரைவாகவும், நட்புடனும் கூடிய பேச்சுவார்த்தை மூலம் எல்லை பிரச்னைக்கு தீர்வு கண்டு, இந்த பிராந்தியத்தில் அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் நிலைநாட்ட வேண்டும் என விரும்புகிறோம். எல்லை பிரச்னையை, சிக்கலாக்கும் வகையில், இந்தியா எந்த நடவடிக்கையும் எடுக்காது என நம்புகிறோம் என்றார்.

அருணாச்சல் மாநிலத்தில் சீன எல்லையை ஒட்டி, எல்லையில், 2000 கி.மீ., தூரத்திற்கு சாலைஅமைக்கும் திட்டத்திற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அருணாச்சல்லின் தவாங் மாவட்டத்தில் உள்ள மாகோ திங்கு பகுதியிலிருந்து, சங்லாங் மாவட்டத்தில் உள்ள விஜய்நகர் பகுதியை இணைக்க சாலை அமைக்க இந்தியா திட்டமிட்டது. சீனாவின் உள்கட்டமைப்பை கருத்தில் கொண்டு, இந்த சாலையை அமைக்க இந்தியா திட்டமிட்டது.

இதற்கு பதிலளிக்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கடந்த சில நாட்களுக்கு முன்னர், இந்தியாவை யாரும் மிரட்ட முடியாது. இந்தியா தனது பலத்தினால் வளர்ச்சி பெறுகிறது. இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என கூறியிருந்தார்.

TAGS: