வெளிநாட்டில் கறுப்புப்பணம்: இந்தியர்களின் பெயர்களை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவு

black_money_india
வெளிநாடுகளில் பதுக்கப்பட்ட இந்தியப் பணம்– உச்சநீதிமன்றம் உத்தரவு

பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளின் அதிகாரிகள் இந்தியாவுக்கு அளித்த, வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் முழு பட்டியலையும் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாளை புதன்கிழமைக்குள் அனைத்து பெயர்களையும் ஒரு சீல் வைக்கப்பட்ட கவரில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சமர்ப்பிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் முறைகேடாக பதுக்கி வைத்துள்ள கருப்புப் பணம் தொடர்பிலான வழக்கின் விசாரணை இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்றது.

முழு பட்டியலில் உள்ள வங்கி கணக்குகள் உண்மையானவையா என்று வருமான வரி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக மத்திய அரசு தரப்பு அட்ர்னி ஜென்ரல் முகுல் ரோடாகி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்விடம் தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தத்து, ‘இந்த பெயர்களை உச்ச நீதிமன்றத்தில் அளிப்பதை தவிர மத்திய அரசு எதுவும் செய்ய வேண்டாம்’ என்றும், ‘இந்த விவகாரம் தொடர்பில் வருமான வரித்துறை விசாரணை மேற்கொள்ள வேண்டுமா அல்லது சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டுமா என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கும்’ என்று தெரிவித்தார்.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் முழு பட்டியலை மத்திய அரசு சமர்ப்பிக்கும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,” இந்த விவகாரத்தில், வங்கி கணக்குகள் தொடர்பிலான உண்மைகளை வெளிக்கொண்டுவர, சட்டரீதியில் எந்த நடைமுறையின் அடிப்படையில் வேண்டுமானாலும் செயல்படலாம். உண்மைகள் வெளிவரவேண்டும். அந்த நபர்களின் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அந்த கருப்புப் பணத்தை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வரவேண்டும். இந்த விவகாரத்தை எந்தத் துறை விசாரித்தாலும் மத்திய அரசுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஏற்கனவே மத்திய அரசு இந்த முழு பட்டியலையும் சிறப்புப் புலனாய்வு குழுவிடம் ஒப்படைத்துள்ளதால், உச்ச நீதிமன்றத்தில் சமர்பிப்பதில் எந்த தயக்கமும் இல்லை. நாளைக் காலை முழுப் பட்டியலும் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்”, என்றார் .

வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் முறைகேடாக பதுக்கி வைத்துள்ள கருப்புப் பணத்தை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.

இந்த வழக்கின் அடிப்படையில் கருப்புப் பணத்தை மீட்பது தொடர்பாக மத்திய அரசு உயர்மட்டக் குழு ஒன்றை அமைத்து விசாரித்து வருகிறது.

உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது வெளிநாட்டு வங்கிகளில் பணம் பதுக்கிய மூன்று இந்திய தொழிலதிபர்கள் குறித்த தகவல்களை மத்திய அரசு சார்பில் வழக்குரைஞர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அதில் டாபர் குரூப் இயக்குனராக இருந்த பிரதீப் பர்மன், கோவாவைச் சேர்ந்த சுரங்கத் தொழிலதிபர் ராதா எஸ். டிம்ப்ளோ, பங்கு வர்த்தகர் பங்கஜ் சிமன்லால் லோதியா ஆகிய மூவரது பெயரும் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் இடம் பெற்றிருந்தது. முழு பட்டியலை வெளியிட ஏன் மத்திய அரசு தயங்குகிறது என்று விமர்சனங்கள் எழுந்திருந்தன. -BBC

TAGS: