சீன எதிர்ப்பை மீறி இந்தியா – வியத்நாம் ஒப்பந்தம்

  • தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் வியத்நாம் பிரதமர் குயென் டான் டங் உள்ளிட்ட அந்நாட்டு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி.
  • தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் வியத்நாம் பிரதமர் குயென் டான் டங் உள்ளிட்ட அந்நாட்டு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி.
  • தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் வியத்நாம் பிரதமர் குயென் டான் டங் உள்ளிட்ட அந்நாட்டு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி.
  • தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் வியத்நாம் பிரதமர் குயென் டான் டங் உள்ளிட்ட அந்நாட்டு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி.

சீன எதிர்ப்பையும் மீறி, தென் சீனக் கடல் பகுதியில் எண்ணெய் துரப்பணப் பணியை மேற்கொள்வது தொடர்பாக இந்தியா-வியத்நாம் இடையே செவ்வாய்க்கிழமை ஒப்பந்தம் கையெழுத்தானது.

அரசு முறைப் பயணமாக இந்தியாவுக்கு வந்த வியத்நாம் பிரதமர் குயென் டான் டங், பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார்.

இரு நாடுகளுக்கிடையேயான முக்கிய உறவுகள், பிராந்திய விவகாரங்கள், சுமுகமான கடல் போக்குவரத்து ஆகியவை குறித்து இரு நாட்டுப் பிரதமர்களும் நீண்டநேரம் ஆலோசனை நடத்தினர்.

இதையடுத்து, தென் சீனக் கடல் பகுதியில் இந்தியா-வியத்நாம் இடையேயான மற்றொரு எண்ணெய் துரப்பணப் பணியை மேற்கொள்வது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஏற்கெனவே, வியத்நாம் நாட்டுக்குச் சொந்தமான 5 எண்ணெய் கிணறுகளில் துரப்பணப் பணியை இந்தியா மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்த ஒப்பந்தத்தின்படி கூடுதலாக இரண்டு எண்ணெய்க் கிணறுகளில் துரப்பணப் பணியை இந்தியா மேற்கொள்ளும்.

இந்திய அரசுக்குச் சொந்தமான ஓ.என்.ஜி.சி. விதேஷ் லிமிடெட் – வியத்நாம் பெட்ரோ நிறுவனத்துக்கும் இடையே இதற்கான முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இதன் மூலம் பெட்ரோலியத் துறையில் வளர்ச்சியை மேம்படுத்துவதில் இரு நாடுகளுக்கிடையே சுமுக ஒத்துழைப்பை ஏற்படுத்துவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அமைதி,வளர்ச்சிக்கான ஒப்பந்தம்: ஒப்பந்தம் கையெழுத்தானதையடுத்து, இரு நாட்டுப் பிரதமர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் அமைதிக்கும், ஸ்திரத்தன்மைக்கும் இந்தியா-வியத்நாம் இடையேயான நல்லுறவே காரணம் ஆகும். சுமுகமான கடல்வழிப் போக்குவரத்து, சர்வதேச விதிகளுக்குள்பட்ட கடலோரப் பாதுகாப்பு, வர்த்தகம் ஆகியவை குறித்து நாங்கள் ஆலோசனை நடத்தினோம்.

இப்போது கையெழுத்தான ஒப்பந்தமும் அமைதி, வளர்ச்சியை மையப்படுத்தியே உருவானதாகும்.

எண்ணெய், எரிவாயுத் துறைகளில் இரு நாடுகளும் மேலும் ஒத்துழைப்பு நல்க இந்த ஒப்பந்தம் வழிகோலும். மேலும், விண்வெளித்துறையில் வளர்ச்சியை ஏற்படுத்துதல், அணுசக்தியை ஆக்கப்பூர்வமான பணிக்குப் பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு இரு நாடுகளும் இனி அதிக முக்கியத்துவம் அளிக்கும்.

வியத்நாம் உடனான ராணுவம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மிகவும் முக்கியமானதாக இந்தியா கருதுகிறது. இதன் ஒரு பகுதியாக, வியத்நாம் ராணுவத்தை நவீனமயமாக்குவதில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கும் என்றார் மோடி.

இதனைத்தொடர்ந்து, வியத்நாம் பிரதமர் குயென் டான் டங் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

இந்தியா-வியத்நாம் இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் திருப்திகரமாக அமைந்தது. கிழக்குக் கடல் பகுதியில் இந்தியாவின் நிலைப்பாடு பாராட்டத்தக்க வகையில் உள்ளது.

எங்கள் நாட்டின் முக்கியப் பொருளாதாரச் சந்தையாக விளங்கும் எண்ணெய், எரிவாயு ஆகிய துறைகளில் இந்தியா சிறந்த ஒத்துழைப்பை தொடர்ந்து அளித்து வருவதை நாங்கள் வரவேற்கிறோம்.

இப்போது, வியத்நாமில் மற்ற நாடுகள் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதனை இந்தியா பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எண்ணெய்-எரிவாயு போக்குவரத்து, அவற்றை சந்தைப்படுத்துதல், எண்ணெய் சுத்திகரிப்பு, எரிவாயு தரமேற்றுதல் ஆகிய துறைகளில் இந்திய நிறுவனங்கள் தொழில் தொடங்க வியத்நாமின் கதவுகள் திறந்துள்ளன என்றார் அவர்.

ராணுவ ஒத்துழைப்புக்கு இந்தியா இசைவு

இரு நாடுகளுக்கிடையேயான ராணுவ ஒத்துழைப்பு தொடர்பாக எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்:

* வியத்நாமின் கடற்படைக்கு வலுசேர்க்கும் விதமாக இந்திய ராணுவத்துக்குச் சொந்தமான 4 ரோந்துக் கப்பல்கள் அந்நாட்டுக்கு வழங்கப்படும்.

* இரு நாட்டு ராணுவங்கள் இணைந்து நடத்தும் பாதுகாப்பு ஒத்திகைகள், ராணுவக் கருவிகளைப் பகிர்ந்து கொள்ளுதல் ஆகியவற்றில் கூடுதல் ஒத்துழைப்பு அளிக்கப்படும்.

* வியத்நாம் விமானப் படையினருக்கு மேம்படுத்தப்பட்ட பயிற்சிகளை இந்தியா அளிக்கும்.

* பாதுகாப்பு தொடர்பாக இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்துதல், கடற்படையினருக்கு பயிற்சி, ராணுவத் தரம் மேம்பாடு ஆகியவற்றில் இரு நாடுகளும் பரஸ்பரம் உரிய ஒத்துழைப்பு அளிக்கும்.

* தென் சீனக் கடல் பகுதியில் கப்பல் போக்குவரத்து நடைபெறுவதற்கோ, அங்கு விமானங்கள் பறப்பதற்கோ எந்த நாடும் தடைவிதிக்க முடியாது என்ற உறுதிப்பாட்டை இரு நாடுகளும் எடுத்துக்கொள்ளும்.

TAGS: