ஏர்செல்-மேக்சிஸ் விவகாரம்: மாறன் சகோதரர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

  • கலாநிதி மாறன் - தயாநிதி மாறன்
    கலாநிதி மாறன் – தயாநிதி மாறன்

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் மத்திய முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரரும் சன் குழுமத் தலைவருமான கலாநிதி மாறன் உள்ளிட்ட 8 பேர், அடுத்த ஆண்டு மார்ச் 2-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக அழைப்பாணை (சம்மன்) அனுப்ப, தில்லி சிபிஐ நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

மேலும், அவர்களுக்கு எதிராக சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதாகக் கூறி, அவற்றை சிபிஐ நீதிமன்றம் பதிவு செய்தது.

இதையடுத்து, ஏர்செல்-மேக்சிஸ் வழக்கின் விசாரணை முறைப்படி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் தொடங்கவுள்ளது.

ஏர்செல் நிறுவனர் சிவசங்கரன் அளித்த புகாரின் பேரில் தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன், மேக்சிஸ் நிறுவனத் தலைவர் டி.அனந்தகிருஷ்ணன், அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ரால்ஃப் மார்ஷல் மற்றும் சன் டைரக்ட், மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ், செüத் ஏசியா என்டர்டெயின்ட்மென்ட் ஹோல்டிங், அஸ்ட்ரோ ஆல் ஏசியா நெட்வொர்க் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக தில்லி நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்த வழக்கில், மத்திய அமைச்சராக தயாநிதி மாறன் பதவி வகித்த காலத்தில் மத்திய தொலைத் தொடர்புத் துறைச் செயலராக இருந்த ஜே.எஸ்.சர்மா, தற்போது உயிருடன் இல்லை என்பதால் அவரது பெயர் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டிருந்த போதிலும், அவருக்கு எதிராக வழக்கை நடத்த முடியாது என்று சிபிஐ கூறியுள்ளது.

நீதிபதி உத்தரவு: இந்த நிலையில், சிபிஐ குற்றப்பத்திரிகையில் மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட நால்வர் மற்றும் நான்கு நிறுவனங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை தில்லி சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்றது.

அப்போது, சிபிஐ தரப்பில் மூத்த வழக்குரைஞர் கே.கே.கோயல் ஆஜாராகி குற்றச்சாட்டுகளை விளக்கி, சிபிஐ தாக்கல் செய்துள்ள மனுவை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதையடுத்து, சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி பிறப்பித்த உத்தரவின் விவரம்:

2004-2007-ஆம் ஆண்டு மே 17-ஆம் தேதி வரை மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தார். அதன்பிறகு, அரசுப் பதவியை அவர் வகிக்கவில்லை. இதேபோல, வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மற்றவர்களும் தனிநபர்களாவர்.

எனவே, அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர யாரிடமும் அனுமதி பெற வேண்டிய அவசியம் எழவில்லை’ என்ற சிபிஐ தரப்பு வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்கள் மீது சிபிஐ சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள், அதற்கு ஆதாரமாக தாக்கல் செய்யப்பட்டுள்ள முக்கிய ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்தையும் முழுமையாகப் படித்துப் பார்த்தேன். அவற்றின் அடிப்படையில், குற்றம்சாட்டப்பட்டோருக்கு எதிராக ஆதாரங்கள் உள்ளதன் அடிப்படையில் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் பதிவு செய்கிறது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 8 பேரில் மூவர் சென்னைவாசிகள் (தயாநிதி மாறன், கலாநிதி மாறன், சன் டைரக்ட் நிறுவனத்தின் பிரதிநிதி); மீதமுள்ள ஐவர் (அனந்தகிருஷ்ணன், ரால்ஃப் மார்ஷல், மூன்று நிறுவனங்களின் பிரதிநிதிகள்) மலேசியா, மொரீஷியஸ், பிரிட்டன் போன்ற நாடுகளில் வசித்து வருவதால் அவர்களுக்கான அழைப்பாணையை வழங்க அதிகபட்சமாக 4 மாதங்களாவது அவகாசம் தேவைப்படும் என சிபிஐ வழக்குரைஞர் கேட்டுக் கொண்டுள்ளார். அதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு, குற்றம்சாட்டப்பட்ட 8 பேரும் அடுத்த ஆண்டு மார்ச் 2-ஆம் தேதி ஆஜராக அழைப்பாணை அனுப்ப வேண்டும் என்று உத்தரவிடுகிறேன்.

மேலும், அழைப்பாணையை அவர்கள் பெற்றுக் கொண்டதற்கான ஆவணத்தை மார்ச் 2-ஆம் தேதிக்கு ஒரு வாரம் முன்னதாக நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்ய வேண்டும் என சிறப்பு நீதிபதி சைனி உத்தரவிட்டார்.

பின்னணி: ஏர்செல் நிறுவனப் பங்குகளை விற்க அதன் நிறுவனர் சிவசங்கரனுக்கு 2007ஆம் ஆண்டில், மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் நெருக்கடி கொடுத்ததாகவும், அந்தப் பங்குகளை மேக்சிஸ் நிறுவனம் வாங்கியவுடன் அந்த நிறுவனத்துக்கு பல்வேறு தொலைத் தொடர்பு வட்டங்களில் சேவை வழங்க தொலைத் தொடர்புத் துறை அனுமதி அளித்ததாகவும் சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.

மேலும், இந்தப் பேரம் கைகூடியதற்குப் பிரதிபலனாக தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறன் நடத்தி வரும் சன் டைரக்ட் நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனம், தனது துணை நிறுவனங்கள் மூலம் 800 மில்லியன் அமெரிக்க டாலர் (2007-ஆம் ஆண்டு மதிப்பின்படி ரூ.3,500 கோடி) அளவுக்கு முதலீடு செய்ததையும் குற்றப்பத்திரிகையில் சிபிஐ விளக்கியுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக 72 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை, 151 சாட்சியங்கள், 655 ஆதாரக் கோப்புகள் ஆகியவை சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

TAGS: