5 மீனவர்களை விடுதலை செய்யாவிட்டால் பின்விளைவுகள் ஏற்படும்: சீமான் பேச்சு

seeman 20குழித்துறை, நவ.2– நாம் தமிழர் கட்சி சார்பில் குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த நாள் விழா பொதுக்கூட்டம் மேல்புறம் சந்திப்பில் நடந்தது. கூட்டத்துக்கு வடக்கு மாவட்ட தலைவர் ஜான்சிலின் சேவியர் ராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் சந்திரகுமார், கிழக்கு மாவட்ட தலைவர் மரியசந்திரன், செயலாளர் நாகராஜன், மேற்கு மாவட்ட தலைவர் சிதம்பரலிங்கம், செயலாளர் மணிமாறன், முதன்மை ஒருங்கிணைப்பாளர் கலைக்கோட்டுதயம் உள்பட பலர் பேசினர். பத்மநாபபுரம் தொகுதி செயலாளர் செலஸ்டின் வரவேற்றார்.

கூட்டத்தில் சீமான் பேசியதாவது:–

வரலாறு எங்கே அடிமைப்பட்டு கிடக்கிறதோ, அங்கே விடுதலை கிடைப்பதற்காக போராட்டம் நடத்த அதே வரலாறு யாரையாவது முன்னிலைப்படுத்தும். திருவிதாங்கூரும், ஈழமும் அடிமைப்பட்டு கிடந்தது. திருவிதாங்கூரில் வரலாறை தருவித்த பெருமை நேசமணியையே சாரும். இதை யாரும் மறந்து விட முடியாது. திருவிதாங்கூரில் குஞ்சப்பன், செண்பகராமன், ஜீவானந்தம் போன்றவர்களையும் மறந்து விட முடியாது. போற்றுதலுக்கும், வணக்கத்துக்கும் உரியவர்கள் நம் முன்னோர்கள்.

தமிழனுக்கு சொந்தமான கோலார் தங்க வயல் கர்நாடகாவில் உள்ளது. தமிழனால் கட்டப்பட்ட முல்லை பெரியாறு அணை இன்று யாருக்கும் சொந்தம் என்று சிந்தித்து பாருங்கள். இடுக்கி மாவட்டம் கேரளாவில் இணைந்ததால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து வளங்களும் இருந்தும் இலவசத்திற்காக ஏங்கி கிடக்கும் நிலைமை உள்ளது.

இலங்கை அரசு கடலில் மீன்பிடிக்கச் சென்ற 840 மீனவர்களை சுட்டார்கள். உனக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும். ஆனால் போதை பொருள் கடத்தியதாக 5 மீனவர்களை தூக்கில் போட இலங்கை முடிவு செய்துள்ளது. அவர்களை போதைப்பொருட்கள் கடத்தவில்லை. அவர்கள் குற்றவாளிகள் இல்லை என்று அறிவித்து விடுதலை செய்ய வேண்டும். இல்லையேல் தேவையற்ற பின்விளைவுகள் ஏற்படும்.

தமிழகத்தில் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் அரைநூற்றாண்டு ஆட்சி செய்து விட்டது. மக்களுக்கு மின்சாரம் தடையில்லாமல் தர முடிகிறதா? என கருணாநிதியை கேட்டால் அவர் ஜெயலலிதாவை குறை கூறுகிறார். ஜெயலலிதாவை கேட்டால் கருணாநிதியை குறைகூறுகிறார். அரசியல் கட்சிகள் மக்களை ஏமாற்ற இலவச திட்டங்களை அறிவிக்கிறார்கள். ஆனால் குடிநீருக்கு 10 ரூபாய் வசூல் செய்கிறார்கள். டாஸ்மாக் கடையில் குடிப்பதற்கு வண்டியில் போகலாம், ஆனால் வரும்போது வண்டியில் வரக்கூடாது. இது என்ன நியாயம்.

இவ்வாறு சீமான் பேசினார்.

TAGS: