இலங்கை துறைமுகத்தில் சீன நீர்மூழ்கி கப்பலை நிறுத்த அனுமதி: இந்தியா கடும் அதிர்ச்சி

china_ship_001இந்தியாவின் சுமர் உள்ளிட்ட பகுதிகளில் சீன இராணுவம் கடந்த செப்டம்பர் மாதம் ஊடுருவி இருந்தது. அதே நேரத்தில் இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் சீனாவின் 2 போர்க்கப்பல்களும், அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கி கப்பல் ஒன்றும் நிறுத்தப்பட்டிருந்தது.

இந்திய பகுதியில் சீன இராணுவம் ஊடுருவியிருந்த நேரத்தில், கொழும்பு துறைமுகத்தில் அந்த நாட்டு போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டிருந்த விவகாரம் இந்தியாவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் பாக் ஜலசந்தி பகுதியில் சமீபகாலமாக நடந்து வரும் சீன போர்க்கப்பல்களின் நடமாட்டம் தொடர்பாக இந்தியா தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது.

இது குறித்து சமீபத்தில் இந்தியா வந்திருந்த இலங்கை இராணுவ மந்திரி கோத்தபய ராஜபக்சவிடம் மத்திய அரசு கடும் அதிருப்தியை தெரிவித்தது.

கடந்த வாரம் இந்தியா வந்திருந்த இலங்கை கடற்படை தளபதி ஜெயந்தா பெரேரா, இது குறித்து கூறும்போது,

கொழும்பு துறைமுகத்துக்கு நல்லெண்ண அடிப்படையில்தான் சீன போர்க்கப்பல்கள் வந்ததாகவும், இது வழக்கமான நடவடிக்கைதான் என்றும் கூறினார்.

மேலும் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்க மாட்டோம் என்று உறுதியளித்த அவர், இலங்கையில் சீன இராணுவ வீரர்கள் யாரும் இல்லை என்றும் கூறினார்.

இந்தநிலையில் சீனாவின் மற்றொரு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் ஒன்றை இலங்கை துறைமுகத்தில் நிறுத்துவதற்கு அந்த நாடு மீண்டும் அனுமதி அளித்துள்ளது.

தாக்குதலில் ஈடுபடக்கூடிய திறன் வாய்ந்த இந்த நீர்மூழ்கி கப்பல், விரைவில் இலங்கையில் உள்ள துறைமுகம் ஒன்றில் நிறுத்தப்படும் என தெரிகிறது.

இலங்கையின் இந்த இரட்டை வேடத்தன்மை இந்தியாவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.

எனவே இது தொடர்பாக இலங்கை அரசை தொடர்பு கொண்டு, இந்தியா தனது கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளது.

சீனாவின் நீர்மூழ்கி கப்பல் இலங்கையில் தரித்துள்ளது

இலங்கைக்கு சீனாவின் நீர்மூழ்கி கப்பல் ஒன்று வரவுள்ளதாக இந்திய இணையத்தளம் ஒன்று நேற்று செய்தி வெளியிட்டிருந்த நிலையில் குறித்த கப்பல் இலங்கைக்கு கடந்த வெள்ளிக்கிழமை வந்தடைந்து விட்டதாக வெளிநாட்டு செய்திச்சேவை ஒன்று தெரிவித்துள்ளது.

இந்தியாவின் கடுமையான ஆட்சேபனைக்கு மத்தியிலேயே இந்த கப்பல் வந்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செங்சிங் 2 என்ற நீர்மூழ்கி கப்பலும் செங் சிங்டோ என்ற போர்க்கப்பலும் கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே 7 வாரங்களுக்கு முன்னரும் சீனாவின் நீர்மூழ்கி கப்பல் ஒன்று இலங்கைக்கு வந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வெள்ளிக்கிழமை இலங்கைக்கு வந்த கப்பல்கள் மாலுமிகளின் ஓய்வு மற்றும் எரிபொருள் நிரப்புக்காக 5 நாட்கள் இலங்கையில் தரித்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக்கப்பல்களின் வருகையானது நாடுகளுக்கு இடையிலான பொதுவான நடவடிக்கை என்று இலங்கை தெரிவித்துள்ளது.

எனினும் சென்னை கற்கைகள் மையத்தின் அதிகாரியும் இந்திய இராணுவத்தின் முன்னாள் கேர்ணலுமான ஆர் ஹரிஹரன் கடற்கொள்ளையர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சீன  இராணுவத்தின் ஒரு அங்கமான நீர்மூழ்கி கப்பல்கள் இந்து சமுத்திரத்தில் சஞ்சரிப்பது பொதுவான விடயமாக இருக்காது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

TAGS: