ராமர் பாலத்துக்குப் பாதிப்பின்றி சேது சமுத்திரத் திட்டம் நிறைவேறும்: நிதின் கட்கரி

  • மண்டபம் கடலோரக் காவல் படை அலுவலகத்தில் சேது சமுத்திரத் திட்டத்தை மாற்றுப் பாதையில் செயல்படுத்துவது குறித்து விளக்கம் அளிக்கும் மத்திய தரைவழிப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி. உடன், (இடமிருந்து) ராமர் பாலப் பாதுகாப்பு இயக்கச் செயலாளர் து.குப்புராமு, பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் சுப.நாகராஜன், மத்திய கனரகத் தொழில்கள் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இந்திய கடலோரக் காவல் படை ஐ.ஜி.பி.எஸ்.சர்மா, சேது சமுத்திரத் திட்டக் கழகத் தலைவர் அதுல்ய மிஸ்ரா.
  • மண்டபம் கடலோரக் காவல் படை அலுவலகத்தில் சேது சமுத்திரத் திட்டத்தை மாற்றுப் பாதையில் செயல்படுத்துவது குறித்து விளக்கம் அளிக்கும் மத்திய தரைவழிப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி. உடன், (இடமிருந்து) ராமர் பாலப் பாதுகாப்பு இயக்கச் செயலாளர் து.குப்புராமு, பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் சுப.நாகராஜன், மத்திய கனரகத் தொழில்கள் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இந்திய கடலோரக் காவல் படை ஐ.ஜி.பி.எஸ்.சர்மா, சேது சமுத்திரத் திட்டக் கழகத் தலைவர் அதுல்ய மிஸ்ரா.

ராமர் பாலத்துக்கு எந்தப் பாதிப்பும் வராமல் சேது சமுத்திரத் திட்டம் மாற்றுப் பாதையில் நிறைவேற்றப்படும் என மத்திய தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி செவ்வாய்க்கிழமை உறுதியளித்தார்.

பாக். ஜலசந்தியையும், மன்னார் வளைகுடாவையும் இணைக்கும் வகையில் கடல் வழிப்பாதை அமைப்பதற்காக கடந்த 2005-ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தொடங்கப்பட்ட சேதுசமுத்திரத் திட்டடப்பணி ராமர் பாலம் உள்ளிட்ட பிரச்னைகளால் முடங்கியது. இந்த நிலையில், சேது சமுத்திரத் திட்டப்பணியை மீண்டும் தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, மத்திய தரைவழிப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி செவ்வாய்க்கிழமை மண்டபம் கடலோரக் காவல் படை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ராமசேது பாலத்துக்கு எவ்விதப் பாதிப்பும் இல்லாமல் சேது சமுத்திரத் திட்டத்தை மாற்றுப் பாதையில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். ராமர் பாலத்தை இடிக்கும் பேச்சுக்கே இடமில்லை. வரலாற்றுச் சிறப்பு மிக்க ராமசேதுவைப் பாதுகாப்போம். இதற்கான வழிமுறைகள் குறித்து பல்வேறு அமைப்புகளும் அறிக்கைகள் தந்திருக்கின்றன. அதனடிப்படையில், சேது சமுத்திரத் திட்டத்தை எந்தப் பாதையில் நிறைவேற்றுவது என அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்யவே வந்துள்ளேன். திட்டத்துக்கு தகுந்தப் பாதை எது என்பதை முடிவுசெய்து, அதனை மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதித்தப் பிறகு முடிவு செய்யப்படும் என்றார் அவர்.

பேட்டியின்போது, மத்திய கனரகத் தொழில்கள் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சேது சமுத்திர திட்டக் கழகத் தலைவர் அதுல்ய மிஸ்ரா, இந்திய கடலோரக் காவல் படை ஐ.ஜி. பி.எஸ்.சர்மா, பா.ஜ.க. மாநிலத் துணைத் தலைவர் சுப.நாகராஜன், தேசிய செயற்குழு உறுப்பினர் முரளீதரன், ராமர் பாலப் பாதுகாப்பு இயக்கச் செயலாளர் து.குப்புராமு ஆகியோர் உள்பட பலரும் உடன் இருந்தனர்.

இதையடுத்து, தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடைப்பட்ட கடல் பகுதிகள், சேது சமுத்திரத் திட்டம் தொடங்கப்பட்டபோது தோண்டப்பட்ட கால்வாய் பகுதிகள், தூக்குப் பாலம், அமெரிக்கா சென்றுவிட்டு சுவாமி விவேகானந்தர் இந்தியா திரும்பி வந்தபோது வந்திறங்கிய குந்துகால் நினைவு மண்டபம், பூமரிச்சான் தீவை ஓட்டியுள்ள கடல் பகுதிகள், ராமர் பாலத்தை இடிக்காமலும், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாமலும் சேது சமுத்திரத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ள மாற்று வழிப் பாதைகள் உள்ளிட்ட இடங்களையும் இந்திய கடற்படைக்குச் சொந்தமான அதிநவீன ஹோவர்கிராப்ட் கப்பலில் சென்று நிதின்கட்சி ஆய்வு செய்தார். அவருடன் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும், மேற்கூறிய அதிகாரிகளும் சென்றனர்.

TAGS: