பா.ஜ.க அரசும் பாராமுகமாக இருப்பது வேதனை!

5 fisherman-01மீண்டும் அவலக் குரல்கள் ஒலிக்கின்றன இராமேஸ்வரத்தில். போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐந்து மீனவர்களுக்குத் தூக்குத் தண்டனை வழங்கியிருக்கிறது இலங்கை நீதிமன்றம்.

அந்த ஐந்து பேரும் உண்மையிலேயே போதைப்பொருள் கடத்தியிருக்கும் சாத்தியங்கள் மிகக் குறைவு என்ற வாதங்கள் முன்வைக்கப்படும் நிலையில்… இதை ஒரு தனி சம்பவமாக, துண்டித்துப் பார்க்க முடியாது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் மீதான தாக்குதலை முன்னெப்போதையும்விட மோசமாக முடுக்கிவிடுகிறது இலங்கை அரசு.

இத்தனை ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகும், அழுத்தமான ஓர் எதிர் நடவடிக்கைகூட இந்திய அரசுத் தரப்பில் இதுவரை இல்லை.

காங்கிரஸ் அரசுதான் கண்டுகொள்ளவில்லை என்றால், பா.ஜ.க அரசும் பாராமுகமாக இருப்பது வேதனை.

குறைந்தபட்சம் அவர்களை இந்திய மீனவர்களாகக்கூட கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், ‘தமிழக மீனவர்கள்’ எனத் தள்ளிவைத்துப் பார்ப்பது இன்னும் கொடுமை.

தமிழர்கள் மீது மாபெரும் இன அழிப்புப் போரை நடத்திய ராஜபக்ச, இனவெறுப்பு நடவடிக்கைகள் மூலம் தேர்தலில் வெற்றிகளை அறுவடை செய்யப் பார்க்கிறார்.

“இந்திய மீனவர்கள் ஐவருக்கு தூக்கு“  என்ற செய்தி இந்தியாவில் எதிர்விளைவுகளை உருவாக்கும் என்பதும், இதன் நேர்விளைவாக சிங்களவர்கள் மத்தியில் ஆதரவு பெருகி, எதிர்வரும் தேர்தலில் வெற்றியைப் பெற்றுத்தரும் என்பதும் அவர் போடும் கணக்குகளில் ஒன்று.

அதனால்தான் இரண்டு ஆண்டுகள் கழித்து நடக்க வேண்டிய அதிபர் தேர்தலை, வரும் ஜனவரி மாதத்திலேயே நடத்தப்போகிறார்.

இப்படி இரு நாட்டு உறவைப் பகடையாக்கி நடத்தப்படும் தந்திர அரசியலுக்கு, இன்னும் எத்தனை மீனவர்களின் உயிர்களை நாம் பலி கொடுப்பது?

இந்தியா போன்ற நீண்ட கடற்பரப்பைக்கொண்ட ஒரு நாட்டில், மீனவர்கள் வெறுமனே மீன்பிடித் தொழில் செய்பவர்கள் மட்டும் அல்ல. அவர்கள் சம்பளம் வாங்காத இராணுவமாக இந்தியக் கடல் எல்லையைப் பாதுகாக்கின்றனர்.

அவர்களுக்கு அச்சமற்ற வாழ்வை உத்தரவாதப்படுத்த வேண்டியது அரசின் பொறுப்பு.

நவீனத் தொழில்நுட்பங்களின் உதவியுடன் மீனவர்களின் கடல் வாழ்வை இன்னும் பாதுகாப்பானதாக, மேம்பட்டதாக மாற்றி அமைக்க வேண்டும்.

முக்கியமாக நமது மத்திய அரசு மீனவர்களின் நலனுக்கு என தனி அமைச்சகத்தை உருவாக்க வேண்டும்.

அது, ‘மீன் வளத் துறை’யாக மட்டுமே இருக்காமல், ‘மீனவர் நலத் துறை’யாகவும் இருக்க வேண்டும்!

TAGS: