இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஐந்து தமிழக மீனவர்களை விடுதலை செய்யும் நடவடிக்கையில் பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் நேரடியாகத் தலையிட வலியுறுத்துவேன் என்று மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
தில்லியில் சாலைப் பாதுகாப்புத் திட்டம் தொடர்பான நிகழ்ச்சியில் நிதின் கட்கரி புதன்கிழமை பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களை விடுவிக்கும் விஷயத்தில் மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என கேட்கப்பட்டது. அதற்கு நிதின் கட்கரி அளித்த பதில்:
தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்தபோது ராமநாதபுரம் மீனவர்களை செவ்வாய்க்கிழமை சந்தித்தேன். தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள் மீது போதைப் பொருள் கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் இலங்கை நீதிமன்றம் அனைவருக்கும் தூக்குத் தண்டனை விதித்துள்ளது. அந்தத் தீர்ப்பை எதிர்த்து அந்த நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியுள்ளது என மீனவப் பிரதிநிதிகளிடம் தெரிவித்தேன்.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை அரசு தொடர்ந்த வழக்கு போலியானது என்பது மீனவர்கள் தரப்பு வாதம். இதை வலியுறுத்தி மேல்முறையீட்டின் போது மீனவர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வாதிடப்படும். இதுபோன்ற சட்ட நடைமுறைகள் ஒருபுறமிருக்க, ராஜீய ரீதியில் மீனவர்களை விடுவிக்கும் முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். இதற்காக பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரை விரைவில் சந்தித்து இந்த விவகாரத்தில் அவர்கள் நேரடியாகத் தலையிட்டு சம்பந்தப்பட்டவர்களுடன் பேச வேண்டும் என கேட்டுக் கொள்ளவுள்ளேன். என்னிடம் மீனவர் சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்த கவலையையும் பிரதமர் நரேந்திர மோடியிடம் பகிர்ந்து கொள்வேன் என்றார் நிதின் கட்கரி.