கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை, சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி அதிகரிக்க வேண்டிய நிலையில் உள்ள கேரள அரசு, அதன் நீர்பிடிப்பு பகுதியில் உள்ள கட்டடங்களைப் பாதுகாக்க, பல காரணங்கள் கூறி தண்ணீரை வெளியேற்ற முயன்று வருகிறது.
கடந்த அக்டோர் 18ம் தேதிக்கு மேல் வட கிழக்குப் பருவ மழை பெய்யத் துவங்கியதால், பெரியாறில் நீர் பெருக்கம் ஏற்பட்டு, அணைக்கு வரத்து அதிகரித்தது. மூன்று தினங்களுக்கு முன், அணையின் நீர்மட்ட உயரம், 136 அடியை எட்டியது.
அன்றைய தினம், கேரள பொதுப் பணித் துறை அதிகாரிகள், அணையை திடீர் ஆய்வு செய்தனர். நேற்று முன்தினம், அணையின் நீர்மட்ட உயரம், 138 அடியை எட்டியதும், தண்ணீரைத் தமிழகம் பக்கம் திறந்து விட்டனர்.
குறைக்க வேண்டும்: மேலும், ‘ஷட்டர்’களில் இரண்டு பழுதானதாகவும், கேரள அரசுக்கு அறிக்கை கொடுத்தனர். அதை வைத்து, அந்த அரசும், ‘அணையின், ‘ஷட்டர்’கள் சரி செய்யப்படும் வரை வரை, நீர்மட்ட உயரத்தை, 136 அடியாகக் குறைக்க அனுமதிக்க வேண்டும்’ என்று, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது.
இதை அறிந்த தமிழக விவசாயிகள் கொதிப்படைந்துள்ளனர். அவர்கள் கூறுகையில், ‘முல்லை பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கட்டப்பட்டுள்ள, ஆக்கிரமிப்பு கட்டடங்களை பாதுகாக்கவே, சுப்ரீம் கோர்ட்டில், கேரள அரசு வழக்கு தொடரும் நாடகத்தை அரங்கேற்றுகிறது; இதில் வேறு எந்த மர்மமும் இல்லை’ எனக் கூறியுள்ளனர்.
அவர்கள் மேலும் கூறியதாவது:தற்போது, வினாடிக்கு, 1.22 லட்சம் கனஅடி உபரிநீரை வெளியேற்றும் வசதி செய்யப்பட்டுள்ளது. இவ்வளவு அதிகமான நீரை வெளியேற்றினாலும், அது கேரள மாநிலப் பகுதிகளை பாதிக்காமல், இடுக்கி அணையை சென்று சேரும். அந்த அணையில், 70 டி.எம்.சி.,க்கு மேல் தண்ணீரை சேமிக்க முடியும்.
ரிசார்ட்கள்:பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில்,3,000 ஏக்கருக்கு மேல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதில், தனியார் மட்டுமின்றி கேரளா சுற்றுலாத் துறையும் கட்டடங்களை கட்டியுள்ளது. ஏராளமான தனியார் ரிசார்ட்கள் உள்ளன. கேரளாவிற்கு சுற்றுலாத்துறை மூலம் தான் அதிகளவில் வருவாய் கிடைக்கிறது.அதில், முல்லை பெரியாறு சுற்றுலா தலம் முக்கியமானது. அணையில், 142 அடிக்கு தண்ணீரை தேக்கினால், அதன்பிறகு, 152 அடிக்கு தண்ணீரை உயர்த்துவதில் எந்த பிரச்னையும் இருக்காது. இதனால்,
ஆக்கிரமிப்பு கட்டடங்கள் தானாகவே மூழ்கும். சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரும் கேரள அரசின் மர்மம் இதுதான்.எனவே, அணையை தமிழக கட்டுப்பாட்டில் கொண்டு வர, அங்கு தமிழக போலீஸ் பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும். கேரள சோதனைச் சாவடியை அகற்றிவிட்டு, தமிழக சோதனைச் சாவடியை அமைக்க வேண்டும்.நீர்பிடிப்பு பகுதிகளின் ஆக்கிரமிப்பை, உடனே அகற்ற வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
விவகாரத்தை அரசியலாக்காதீர்கள்;பொறுப்புடன் கவனிக்கிறோம்!: திருப்பூர், கரூர் மாவட்டங்கள் பலன்பெறும், அமராவதி அணையின் நீர்பிடிப்பு பகுதியில், 23 கோடி ரூபாயில் தடுப்பணையின் உயரத்தை அதிகரிப்பதற்கானஏற்பாடுகளை, கேரள அரசு துவங்கியுள்ளது.
கேரளாவை சட்ட ரீதியாக எதிர்கொள்வதற்கான தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. அதன்பின், அதிகாரி ஒருவர் கூறியதாவது:அமராவதி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில், தடுப்பணை உயரத்தை அதிகரிக்கும் முயற்சியில் கேரளா இறங்கியுள்ளது.
தடுப்பணை அமைந்துள்ள இடம், அமராவதி அணை நீர்பிடிப்பு பகுதியில் அமைந்துள்ளதா என்ற ஆய்வு நடந்து வருகிறது. இந்த தகவல் கைக்கு வந்ததும், சட்ட ரீதியான நடவடிக்கைகள் துவங்கும். அரசியல் கட்சிகளும், விவசாயிகளும் இந்த இரண்டு பிரச்னைகளை கையில் எடுக்க வேண்டாம். தமிழக உரிமையை பாதுகாக்கும் பொறுப்பு, தமிழக பொதுப்பணித் துறைக்கு உண்டு.இவ்வாறு அவர் கூறினார்.
– நமது நிருபர் –
மஞ்சள் துணியை போட்டு கழுத்த அறுக்கமா இருந்தா சரி