அண்டை நாடுகள் தங்கள் எல்லைக்கு அருகில் உள்ள பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியது போல் நமது தரப்பிலும் அவ்வாறு செய்வதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
“அண்டை நாடுகள்’ என்று சீனாவையே அவர் மறைமுகமாகக் குறிப்பிட்டதாகக் கருதப்படுகிறது. இது தொடர்பாக, தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாதுகாப்புத் துறைக்கான ஆலோசனைக் குழுவின் முதல் கூட்டத்தில் ஜேட்லி பேசியதாவது:
நமது அண்டை நாடுகள் எல்லைக்கு அருகில் உள்ள பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்கெனவே நன்கு மேம்படுத்தி விட்டன. எனவே நாமும் எல்லைக்கு அருகில் உள்ள நமது பகுதிகளில் இதுபோன்ற வசதிகளை மேம்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
சிக்கலான அப்பகுதிகளில் சாலைகளை அமைக்கும் பணிகளைத் துரிதப்படுத்துவதற்காக, சுற்றுச்சூழல் அனுமதி பெறுதல், நடைமுறை சார்ந்த தாமதங்கள், உயர் தொழில்நுட்பச் சாதனங்கள் தட்டுப்பாடு போன்றவற்றைச் சமாளிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
சுற்றுச்சூழல் அனுமதிக்கான விதிமுறைகளைத் தளர்த்திய சுற்றுச்சூழல் வனத்துறைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எல்லைக்கு அருகில் உள்ள பகுதிகளில் சாலை அமைக்கும் பணிகளில் முன்னேற்றம் ஏற்பட இது உதவியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் சமீபத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகளைச் சீரமைப்பதில், எல்லைச் சாலைகள் கட்டுமான அமைப்பு ஆற்றிய பணி மகத்தானது என்றார் அருண் ஜேட்லி.
இந்திய-சீன எல்லைச் சாலைகளைப் பொருத்தவரை, மொத்தம் 3,812 கி.மீ. நீளமுள்ள 73 சாலைகளை அமைக்கும் பணிகளை அரசு தொடங்கியுள்ளதாக பாதுகாப்புத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. இவற்றில் 61 சாலைகளை அமைக்கும் பணி, எல்லைச் சாலைகள் கட்டுமான அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.