தமிழக மீனவர்கள் ஐந்து பேரை மரண தண்டனையில் இருந்து விடுவிக்க, இலங்கை உச்ச நீதிமன்றத்தில் வரும் திங்கள்கிழமை (நவ.10) மேல்முறையீடு செய்யப்பட உள்ளது.
மேல்முறையீடு உள்ளிட்ட வழக்குச் செலவினங்களுக்காக, இலங்கையிலுள்ள இந்தியத் தூதரகத்துக்கு ரூ.20 லட்சம் சனிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்தது.
இதுகுறித்து தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தைச் சேர்ந்த எமர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாத், லாங்லெட் ஆகிய ஐந்து மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அவர்களைக் கைது செய்த இலங்கைக் கடற்படையினர், போதைப் பொருள் கடத்தியதாக அவர்கள் மீது பொய்க்குற்றம் சாட்டினர்.
இதுதொடர்பாக, யாழ்ப்பாணம் மாகாணம் மல்லாகம் நீதிமன்றத்தில் போதைப் பொருள் கடத்துதல் குற்றத்துக்கான பிரிவின்கீழ், இலங்கை அரசால் உள்நோக்கத்துடன் பொய் வழக்குத் தொடரப்பட்டது. இந்த அப்பாவி மீனவர்களை விடுவிக்கும் நடவடிக்கைகளுக்கான செலவுக்காக ரூ.2 லட்சம் நிதியுதவி கடந்த 2011-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் வழங்கப்பட்டது.
தமிழக அரசின் நிதியுதவியுடன், ஐந்து மீனவர்களை ஜாமீனில் விடுதலை செய்ய யாழ்ப்பாணம் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், ஜாமீன் மறுக்கப்பட்டு, அவர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இலங்கை நீதிமன்றங்கள் தொடர்ந்து மீனவர்களின் வழக்கில் கடினமான நிலைப்பாட்டை கடைப்பிடித்ததால், வழக்கைத் தொய்வின்றி நடத்தும் பொருட்டு கூடுதல் நிதியாக, கடந்த ஆண்டு ரூ.3 லட்சம் வழங்கப்பட்டது.
எனினும், கொழும்பு உயர் நீதிமன்றம் 5 மீனவர்களுக்கும் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது.
இதுதொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 5 பேரும் மேல் முறையீடு செய்யும் வகையில் உரிய சட்ட உதவிகளை வழங்க இலங்கையிலுள்ள இந்திய தூதரகத்துக்கு உத்தரவிடவேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இந்த சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்கு ஆகும் அனைத்துச் செலவுகளையும் ஏற்க தமிழக அரசு தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், தமிழக அரசின் தலைமைச் செயலர், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளத் துறை அரசுச் செயலர், மீன்வளத் துறை ஆணையர் ஆகியோர் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்துடன் தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட உத்தரவிட்டார்.
அதன்படி, மேல் முறையீடு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை அவர்கள் உறுதி செய்தனர்.
நாளை மேல்முறையீடு: இலங்கையிலுள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளால் கொழும்பு உயர் நீதிமன்ற உத்தரவின் நகல் பெறப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பின் உத்தரவானது சிங்கள மொழியில் இருந்ததால், அதை ஆங்கில மொழிபெயர்ப்பு செய்து, 5 அப்பாவி மீனவர்களை விடுதலை செய்ய, வரும் திங்கள்கிழமை (நவ.10) இலங்கை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த மேல்முறையீட்டு வழக்கில் இலங்கை உச்ச நீதிமன்றத்தில் ஐந்து மீனவர்கள் சார்பில் ஆஜராவதற்காக, மிகச் சிறந்த சட்ட வல்லுநர்கள் இலங்கையிலுள்ள இந்தியத் தூதரகத்தால் இறுதி செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சட்ட வல்லுநர் குழு இலங்கை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு ஆகும் மொத்த செலவினமான ரூ.20 லட்சம், முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் உத்தரவுப்படி இலங்கையிலுள்ள இந்தியத் தூதரகத்துக்கு சனிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
fggg