மீனவர்களை மீட்டு வரும் முயற்சியில் மகிழ்ச்சி தரும் நிலையை இன்னும் எட்டவில்லை: வெளியுறவுத்துறை

5 fisherman-01இலங்கை நீதிமன்றத்தால் தூக்கு தண்டணை விதிக்கப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 5 மீனவர்களை, இந்திய அரசிடம் ஒப்படைக்க அந்நாட்டு அதிபர் ராஜபக்சே ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்தநிலையில் மீனவர்களை பத்திரமாக மீட்டு வரும் முயற்சியில் மகிழ்ச்சி தரும் நிலையை இன்னும் எட்டவில்லை என்று இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

சார்க் நாடுகளுக்கு இடையேயான கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் 5 தமிழக மீனவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்கவும், அவர்கள் மீதான மேல்முறையீட்டு வழக்கை இந்திய நீதிமன்றத்தில் நடத்தவும் இலங்கை அதிபர் ராஜபக்சே, இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்புக்கொண்டதாக திங்கள்கிழமை தகவல்கள் வெளியாகின.

இந்த தகவலை பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி முதலில் தெரிவித்த நிலையில், இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டைமான் 5 மீனவர்களை ஒப்படைக்க ராஜபக்சே கொள்கை அடிப்படையில் முடிவு செய்திருப்பதாக தெரிவித்திருந்தார். இதனை அறிந்த பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மீனவர்கள் தங்களது நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளனர்.

 

இதனிடையே இந்த பிரச்சனை குறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் சையது அக்பருதீன்,

 

5 மீனவர்களை மீட்கும் விவகாரத்தில் மகிழ்ச்சி தரும் நிலையை இன்னும் எட்டவில்லை. பாதிக்கப்பட்ட 5 மீனவர்களும் பத்திரமாக நம் நாட்டுக்கு திரும்புவதற்கான அனைத்து வாய்ப்புகளையும், அனைத்து நிலைகளிலும் மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது.

இலங்கை நீதிமன்றத்தின் தீர்ப்பை அங்குள்ள இந்திய தூதரகம் பெற்றுள்ளது. அந்த தீர்ப்பு 200 பக்கங்களுக்கு சிங்கள மொழியில் உள்ளது. வழக்கறிஞர்கள் அதனை ஆராய்ந்து வருகின்றனர். இந்திய தூதரகம் சட்ட நிபுணத்துவம் வாய்ந்தவர்களைக் கொண்டு, இந்த பிரச்சனையை சிறந்த முறையில் அணுகி இந்தியாவைச் சேர்ந்த 5 பேர் பத்திரமாக நாடு திரும்புவதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறது என்றார்.

 

மேலும், மிகவும் சிக்கலான இந்த பிரச்சனையைப் பற்றி தொடர்ந்து ஊடகங்களில் பேச அரசு விரும்பவில்லை. அதே வேளையில் மீனவர்களை மீட்க அனைத்து முயற்சிகளையும் எடுத்துவருவதாகவும் கூறினார்.

TAGS: