இந்தியாவில் அனைவருக்கும் வீடு: மலேசிய பிரதமர் உதவிட மோடி கோரிக்கை

modi-najibநைபைதா: ”இந்தியாவில், 2022க்குள் அனைவருக்கும் வீடு கட்டித் தரும் திட்டத்தை அறிவித்துள்ளோம். இந்த திட்டத்துக்கு மலேசியா உதவ வேண்டும்,” என, பிரதமர் மோடி, அந்த நாட்டு பிரதமர் நஜீப் தன் ரசாக்கிடம் வலியுறுத்தினார்.

பிரதமர் நரேந்திர மோடி, 10 நாள் அரசுமுறைப் பயணமாக, மியான்மர், ஆஸ்திரேலியா, பிஜி ஆகிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் சென்றுள்ளார்.முதல் கட்டமாக, மியான்மர் சென்ற பிரதமர், அந்நாட்டு அதிபர் யூ தென் செயினை சந்தித்து, இரு நாட்டு உறவு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.

ஆசியான் – பசிபிக் மாநாட்டில் பங்கேற்பதற்காக மியான்மர் வந்துள்ள மலேசிய பிரதமர் நஜீப் தன் ரசாக்கை, பிரதமர் மோடி, நேற்று சந்தித்து பேசினார்.
அப்போது, மோடி, அவரிடம் கூறியதாவது:மலேசியாவில் நீங்கள் செய்துள்ள சீர்திருத்தங்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இதற்காக வாழ்த்துகிறேன். உங்களின் முயற்சியால், மலேசியா வின் நிர்வாகமும், பொருளாதாரமும் மேம்பட்டுள்ளது.வரும், 2022க்குள், இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் வீடு கட்டித் தரும் திட்டத்தை அறிவித்துள்ளோம். இந்த திட்டத்துக்கு மலேசிய அரசும், மலேசியாவில் உள்ள நிறுவனங்களும் உதவ வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

மலேசிய அதிபர் நஜீப் தன் ரசாக் கூறுகையில், ”இந்திய அரசின் திட்டத்துக்கு, மலேசியா கண்டிப்பாக உதவும். இந்தியாவுடனான நட்பை, மலேசியா தொடரும். நீங்கள் (மோடி) கண்டிப்பாக மலேசியாவில் சுற்றுப் பயணம் செய்ய வேண்டும்,” என்றார்.

பாரம்பரிய உறவு:

மியான்மரின் நை-பை-தா நகரில் நேற்று நடைபெற்ற, தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்கத்தின் (ஆசியான்) மாநாட்டில் மோடி பேசியதாவது:
ஆசியான் அமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகளுடன், நீண்ட காலமாக, வர்த்தக, கலை, கலாசார, மதம் மற்றும் பாரம்பரிய உறவுகளை இந்தியா கொண்டுள்ளது. இந்த நிலைமை மேம்பட வேண்டும்.பொருளாதார மேம்பாடு, தொழில்மயமாக்கம் மற்றும் வர்த்தகத்தில், இந்தியாவில் புதிய சகாப்தம் துவங்கி உள்ளது. இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கையும் புதிய வடிவம் பெற்றுள்ளது. விரைவாக வளர்ச்சி அடையும் இந்தியாவும், ஆசியான் நாடுகளும் மிகப்பெரிய பங்குதாரர்களாக வேண்டும். இவ்வாறு, பிரதமர் பேசினார்.

TAGS: