சமஸ்கிருதமயமாக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் : வைகோ வலியுறுத்தல்

சமஸ்கிருதமயமாக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர்  வைகோ வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,

மத்திய அரசு கல்வித் திட்டத்தின் கீழ் இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு அதன் நிர்வாக அமைப்பான கேந்திரிய வித்யாலயா சங்காதன் ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது. அதில், ‘கேந்திர வித்யாலயா பள்ளிகளில் தற்போது கற்பிக்கப்படும் ஜெர்மன் மொழியை அறவே நீக்கிவிட்டு, அதற்கு மாற்றாக சமசுகிருத மொழியைக் கற்பிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது.

நாடு முழுவதும் கல்வி கற்பிப்பதை மேம்படுத்த வேண்டும் என்று பா.ஜ.க. அரசு விரும்பினால், தாய்மொழிவழிக் கல்வியை ஊக்கப்படுத்த வேண்டும். அதைவிடுத்து, சமஸ்கிருத மொழியைத் திணிக்க முயற்சிப்பது ஏன்? என்ற கேள்வி எழுகிறது.

பா.ஜ.க. அரசு பதவி ஏற்றதிலிருந்து இந்தி மொழி திணிப்பு, சமஸ்கிருத மயமாக்குதல் போன்றவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவது கண்டனத்துக்கு உரியதாகும்.

மத்திய அரசின் பல்வேறு உத்தரவுகள் அனைத்தும் மோடி அரசின் ‘சமசஸ்கிருத மயமாக்கல்’ திட்டத்தை வெளிப்படுத்துகின்றன.

இதன் தொடர்ச்சியாகவே தற்போது கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் மூலம் சமஸ்கிருத மொழித் திணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் இத்தகைய ‘சமஸ்கிருத மயமாக்கல்’ நடவடிக்கையை வன்மையாகக் கண்டிப்பதுடன், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் முன்பிருந்த நிலையே தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

TAGS: