ஜெயலலிதாவின் பதவி பறிப்பு: அறிவிப்பை வெளியிட்ட சட்டசபை செயலாளர் பதவி நீக்கம்

stasabai_secretary_001ஜெயலலிதாவின் பதவி பறிப்பு அறிவிப்பை முறைப்படி வெளியிட்ட தமிழக சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன், அந்த பொறுப்பில் இருந்து நேற்று விடுவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சொத்து குவிப்பு வழக் கில் பெங்களூர் தனி நீதிமன்றம், ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடந்த செப்டம்பர் 27ம் திகதி அறிவித்தது.

தண்டனை அறிவிக்கப்பட்ட அந்த நிமிடம் முதல் ஜெயலலிதாவின் முதல்வர் பதவி மற்றும் எம்எல்ஏ பதவி தானாகவே பறிபோனது.

இதையடுத்து, தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் செப்டம்பர் 29ல் பதவியேற்றார்.

வழக்கமாக, முதல்வர் அல்லது அமைச்சர், எம்எல்ஏ ஆகியோர் மீது தொடரப்பட்டுள்ள வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டால், அந்த மாநில சட்டப்பேரவை செயலாளர் உடனடியாக சம்பந்தப்பட்ட தொகுதி காலியாக உள்ளது என்று தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்க வேண்டும்.

இதை தொடர்ந்து, ஸ்ரீரங்கம் தொகுதி காலியாக உள்ளது என்று கடந்த 8ம் திகதி தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரப்பூர்வமாக ஜமாலுதீன் கடிதம் அனுப்பினார்.

இந்த அறிவிப்பு வெளியாகிய சில நாட்களில் தமிழ்நாடு அரசிதழிலும், ஜெயலலிதா எம்எல்ஏ பதவி பறிப்பு மற்றும் ஸ்ரீரங்கம் தொகுதி காலியானது என்று அதிகாரப்பூர்வமாக ஜமாலுதீன் அறிவித்தார்.

அரசிதழில், ஜெயலலிதாவுக்கு எந்தெந்த பிரிவில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது, ரூ.100 கோடி அபராதம், அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் 1 ஆண்டு சிறை அளிக்கப்படும்.

தண்டனை காலம் முடிந்த பிறகும் ஜெயலலிதா 6 ஆண்டு என 10 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது உள்பட முழு தகவலையும் குறிப்பிட்டிருந்தார்.

அரசிதழில் ஜமாலுதீன் பெயரில் வந்த இந்த அறிவிப்பு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

இந்நிலையில், சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன் அந்த பதவியில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டதாக நேற்று மாலை தகவல் வெளியானது.

ஆனால், தலைமை செயலக அதிகாரிகளிடம் விசாரித்தபோது, தகவல் தெரிவிக்க மறுத்து விட்டனர்.

ஜமாலுதீனையும் யாராலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆனால், அவரது அலுவலக ஊழியர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வீட்டுக்கு வழியனுப்பியுள்ளனர்.

TAGS: