ஹரியாணாவில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராகாத சாமியார் ராம்பாலை கைது செய்வதற்காக, அவருடைய ஆசிரமத்துக்குச் சென்ற போலீஸாருக்கும், ராம்பாலின் ஆதரவாளர்களுக்கும் இடையே செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட மோதல் கலவரமாக உருவெடுத்தது.
இதில், பெண்கள், போலீஸார், செய்தியாளர்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கொலை வழக்கு ஒன்றில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சாமியார் ராம்பால் நேரில் ஆஜராகாததால், அவருக்கு பஞ்சாப்-ஹரியாணா உயர் நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிஆணை உத்தரவைப் பிறப்பித்தது.
மேலும், அவரை வெள்ளிக்கிழமை நேரில் ஆஜர்படுத்துமாறும் உத்தரவிட்டது. இதையடுத்து, அவரைக் கைது செய்வதற்காக, ஹிஸார் மாவட்டம், பர்வாலாவில் உள்ள அவருடைய ஆசிரமத்துக்கு துணை ராணுவப் படையினருடன் செவ்வாய்க்கிழமை சென்றோம்.
ராம்பாலின் ஆதரவாளர்கள், ஆசிரமத்தின் வாயிற்கதவுகளை மூடி, எங்களை உள்ளே செல்ல முடியாமல் தடுத்து நிறுத்தினார்கள். உள்ளே அனுமதிக்குமாறு பல முறை கூறியும், அவர்கள் வாயிற்கதவுகளைத் திறக்கவில்லை.
இதையடுத்து, உள்ளே நுழைய முயன்ற எங்கள் மீது ஆசிரமத்துக்கு உள்ளே இருந்து ராம்பாலின் ஆதரவாளர்கள் கற்களை வீசித் தாக்கினர். துப்பாக்கியால் சுட்டதுடன் பெட்ரோல் குண்டுகளையும் வீசினர்.
ஆசிரமத்துக்கு உள்ளே இருக்கும் பொதுமக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாத வகையில் நாங்கள் பதில் தாக்குதல் நடத்தினோம்.
இதையடுத்து, ஆசிரமத்துக்கு வெளியில் திரண்டிருந்த கூட்டத்தை கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் விரட்டியடித்தோம்.
நீண்ட நேரம் நீடித்த இந்த மோதலில் பெண்கள், போலீஸார், செய்தியாளர்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தொலைக்காட்சி நிறுவனங்களின் சாதனங்கள் சேதப்படுத்தப்பட்டன. காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று அந்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
1,000 பேர் தவிப்பு: இதனிடையே, அந்த ஆசிரமத்துக்குள் குழந்தைகள், பெண்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இருப்பதாகவும், அவர்களை வெளியே வர விடாமல் ராம்பாலின் ஆதரவாளர்கள் தடுப்பதாகவும் ஆசிரமத்தில் இருந்து தப்பி வந்தவர்கள் தெரிவித்தனர். மேலும், தங்களை பாதுகாப்பு அரணாகப் பயன்படுத்தி ராம்பாலின் ஆதரவாளர்கள் போலீஸார் மீது தாக்குதலில் ஈடுபட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
ஜேசிபி இயந்திரம் தீ வைப்பு: முன்னதாக, ஆசிரமத்தின் வளாகச் சுவரைத் தகர்ப்பதற்காக கொண்டு வரப்பட்ட ஜேசிபி இயந்திரத்தின் மீது தாக்குதல் நடத்திய ராம்பாலின் ஆதரவாளர்கள், அந்த இயந்திரத்தை தீ வைத்துக் கொளுத்தினர்.
போக்குவரத்து நிறுத்தம்: பல்வேறு நகரங்களில் இருந்து பர்வாலா நகருக்குள் பொதுமக்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பர்வாலாவில் இருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.
ஆசிரமத்தில் ராம்பால்: முன்னதாக, ஆசிரமத்தில் ராம்பால் இல்லை என்றும், உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வரும் அவருக்கு ரகசிய இடத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் ஆசிரம செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மாநிலக் காவல்துறை டிஜிபி எஸ்.என்.வசிஷ்ட், செய்தியாளர்களிடம் கூறுகையில், “எங்களுக்குக் கிடைத்த தகவல்களின்படி, ராம்பால் இன்னமும் ஆசிரமத்தில்தான் இருக்கிறார்; நிலைமையை மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் கண்காணித்து வருகிறார்’ என்றார்.
காவல் துறை கண்காணிப்பு: இந்நிலையில், ராம்பாலின் ஆதரவாளர்கள் தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டிருப்பதால் தில்லி செல்லும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்யுமாறு ஹரியாணா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
ஹரியாணா, பஞ்சாப், ஹிமாசலப் பிரதேசம், சண்டீகர் மாநிலங்களில் இருந்து தில்லி செல்லும் அரசுப் பேருந்துகள், தனியார் பேருந்துகள், சரக்கு வாகனங்கள், கார்கள் ஆகியவற்றை சோதனை செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. -http://www.dinamani.com
சட்டம் எல்லாம் சாமான்யர்களுக்கு மட்டுமே. அரிசியல்வாதிகளும், பணக்காரர்களும், சாமியார்களும் சட்டத்திற்கு உட்படாதவர்கள்.
சாமியாருக்காக அடிச்சிக்கிட்டு சாவும் மடையர்கள்.