மோடியின் அடுத்த இலக்கு இலங்கை விஜயம்! கச்சதீவு மீட்கப்படுமா?

modi_rajabhaksha_001இலங்கைக்கு நல்லெண்ணப் பயணமாக அடுத்த ஆண்டு (2015) தொடக்கத்தில் செல்ல இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளார்.

பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக நரேந்திர மோடி கொழும்பு செல்லவுள்ளதால், அவரது பயணத் திட்டத்தை வெற்றி பெறச் செய்யும் நோக்குடன் இந்திய, இலங்கை அரசுகள் கூட்டாகச் செயல்பட்டு வருகின்றன.

2016-இல் நடைபெற வேண்டிய இலங்கை அதிபர் தேர்தலை ஓராண்டுக்கு முன்பாகவே நடத்த அந்த நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்ச திட்டமிட்டுள்ளார்.

இதன்படி, இலங்கை அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடத்தப்படும் என்று அந்த நாட்டு அதிபர் செயலகம் தெரிவித்துள்ளது.

தேர்தலுக்கு முன்பே பிரதமர் மோடியின் இலங்கை விஜயம் அமையுமா என்பது தெரியவில்லை.

தமிழக பாஜகவுக்கு கை கொடுக்குமா?: மத்தியில் பாஜக தலைமையிலான கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, தென் மாநிலங்களில் காலூன்றும் வாய்ப்புகளை பாஜக மேலிடம் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.

அந்த வகையில், இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்படும் தமிழக மீனவர்களின் பிரச்சினையை அந்தக் கட்சியின் தமிழகத் தலைவர்கள் கையில் எடுத்துள்ளனர்.

இந்தப் பின்னணியில்தான் இலங்கையில் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழகம், புதுச்சேரி மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், மாநில பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், மூத்த தலைவர் இல. கணேசன் உள்ளிட்டோர் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை செவ்வாய்க்கிழமை சந்தித்து வலியுறுத்தினர்.

மீனவர் பிரச்சினைகளை அரசியலுக்காகப் பயன்படுத்தவில்லை’ என்று பாஜக மேலிடத் தலைவர் முரளிதர ராவ் கூறுகிறார். ஆனால், இலங்கைச் சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களை விடுவித்தது, மரண தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து தமிழர்கள் விடுதலையானது போன்ற நிகழ்வுகளை தமிழகத் தேர்தல்களின்போது பாஜக மேலிடம் பயன்படுத்தத் தயங்காது என்பதை அந்தக் கட்சியின் மூத்த தலைவர்கள் மறுக்கவில்லை.

மக்களவைத் தேர்தலில் பெற்ற வெற்றியை, 2016-இல் தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலிலும் பெற வேண்டும் என்ற இலட்சியத்துடன் பாஜக தலைவர்கள் ஒவ்வொரு கட்டமாக தமிழகத்தில் காய்களை நகர்த்தி வருகின்றனர். இந்த முயற்சியில் தமிழக மீனவர்கள் விவகாரமும், பிரதமரின் இலங்கைப் பயணமும் நிச்சயம் கைகொடுக்கும் என்று பாஜக தலைவர்கள் உறுதியாக நம்புகின்றனர்.

எப்போது பயணம்?: இந்த நிலையில், இலங்கை விவகாரங்களைக் கவனித்து வரும் தில்லியில் உள்ள வெளியுறவுத் துறை உயரதிகாரி கூறியதாவது:

இலங்கைக்கு வர வேண்டும் என்று அந்த நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்ச விடுத்த அழைப்பின் பேரில் பிரதமர் நரேந்திர மோடியின் பயணத்துக்கான தேதியை இறுதி செய்ய பரஸ்பரம் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

இலங்கை அதிபர் தேர்தலுக்கு முன்போ, பின்போ பிரதமரின் கொழும்பு பயணம் இருக்கும். இலங்கை நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசும் வாய்ப்பும் ஆராயப்படுகிறது’ என்றார் அவர்

இலங்கையுடன் வர்த்தகம், தொழில், கலாசார உறவுகளை மேம்படுத்துவதிலும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வுத் திட்டங்களை உருவாக்கும் நடவடிக்கைகளிலும் இந்தியா தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இதுபோன்ற செயல்கள், அண்டை நாடுகளுடன் வழக்கமாக இந்தியா வைத்துள்ள நல்லுறவின் அடையாளமாகும்.

ஆனால், இலங்கை விவகாரத்தில் அந்த எல்லையைக் கடந்து, தமிழக மீனவர்களின் நலன்களை மையப்படுத்தியே பிரதமரின் கொழும்பு பயணத் திட்டம் வடிவமைக்கப்படுவதாகவும், அது தமிழக அரசியலில் பாஜகவை காலூன்றச் செய்ய வைக்கும் அச்சாரப் பயணமாகவும் இருக்கும் என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

இலங்கைக் கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள படகுகளைத் திரும்பப் பெறும் விவகாரத்தில் உண்மையிலேயே பாதிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் என்னை அணுகினால், அவர்களின் நிலை குறித்து இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் பேசி நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்’ என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.

இலங்கைக்கு பிரதமர் நரேந்திர மோடி அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பயணம் செய்வதற்கான வாய்ப்பு உள்ளது. அதற்கு முன்னதாக, நான் இலங்கைக்கு வருகிற 24-ஆம் தேதி செல்கிறேன். அப்போது, ராஜபக்சவை சந்தித்து இலங்கைக் கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை விடுவிக்கும்படி கேட்டுக் கொள்வேன்.

ஆனால், தமிழகத்தில் அரசியல் பின்னணி கொண்ட மீன் நிறுவனங்கள், சில பணக்காரர்கள் ஆகியோருக்குச் சொந்தமான படகுகளை விடுவிக்க நான் வலியுறுத்த மாட்டேன்’ என்றார் சுப்பிரமணியன் சுவாமி.

இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து தமிழக மீனவர்களை விடுதலை செய்வதில் பிரதமர் நரேந்திர மோடி காட்டிய முனைப்பை, கச்சதீவில் இந்திய மீனவர்களுக்கு மீன்பிடி உரிமையைப் பெற்றுத் தரும் நடவடிக்கையிலும் காட்டுவார் என்று தெரிகிறது.

தமிழகத்தில் ஆட்சியில் இருந்த திமுகவும், தற்போது ஆட்சியில் இருக்கும் அதிமுகவும் கச்சதீவு விவகாரத்தை பெரிதாக்கி உச்ச நீதிமன்றத்திலும் முறையிட்டன. ஆனால், இன்று வரை தீர்வு கிடைக்கவில்லை.

இலங்கையுடனான கச்சதீவு ஒப்பந்த விவகாரத்தை “முடிந்துபோன பிரச்னை’ என்று மத்திய அரசும் உச்ச நீதிமன்றத்தில் தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த நிலையில், “தமிழர்களின் மீன்பிடி பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் வகையில், ஒப்பந்த அளவில் உள்ள அந்தத் தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதியில் மீன்பிடிக்கவும், இந்திய மீனவர்களின் மீன்பிடி வலைகளை அங்கு உலர்த்திக் கொள்ளவும் இலங்கை அரசின் அனுமதியைப் பெற்றுத் தரும் நடவடிக்கையில் மோடி ஈடுபடுவார்.

இதற்கான வாய்ப்புகள் தீவிரமாக ஆராயப்படுகின்றன’ என்று பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

கச்சதீவு ஒப்பந்தத்தின்படி, அங்கே மீன்பிடிக்கும் வலைகளை உலர்த்தும் உரிமை இந்திய மீனவர்களுக்குத் தரப்பட்டிருக்கிறது. அதன்படி, கச்சதீவைச் சுற்றிய பகுதிகளில் மீன் பிடிக்கும் உரிமையும் உண்டு என்பது தெளிவாகிறது.

ஆனால், இதுவரை இந்தியத் தரப்பு இதுபற்றி வலியுறுத்தவோ, அந்த உரிமையை இந்திய மீனவர்களுக்குப் பெற்றுத் தரவோ முயற்சிக்கவில்லை.

இலங்கையில் உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருந்ததைக் காரணம் காட்டி, இலங்கை அரசு கச்சதீவு பகுதிகளில் இந்திய மீனவர்களின் நடமாட்டத்தைத் தடுக்கும் நிலைமை இப்போது இல்லை.

கச்சதீவு பகுதியில் இந்திய மீனவர்கள் மீன் பிடிக்கும் உரிமையை பிரதமர் மோடி வலியுறுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. -http://www.tamilwin.com

TAGS: