முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய தொழிலகப் படை (சிஐஎஸ்எஃப்) பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் புதன்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவின் விவரம்: “முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்தும் உத்தரவை உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு கடந்த மே 7-ஆம் தேதி அளித்த தீர்ப்பில் உறுதி செய்திருந்தது.
இந்த நிலையில் அண்மைக் காலமாக பெய்து வரும் கன மழையால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. நவம்பர் 17-ஆம் தேதி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 141.07 அடியை எட்டியுள்ளது. இதையடுத்து, அணையின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்தும், அணையின் நீர்மட்டத்தை 136 ஆக குறைக்க உத்தரவிட வலியுறுத்தியும் கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 18) மனு தாக்கல் செய்துள்ளது.
இதனிடையே, பீர்மேடு எம்எல்ஏ பிஜு மோலுடன் சில பத்திரிகையாளர்கள் 17-ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு முன் அனுமதியின்றி அணைக்கு வந்தனர். அப்போது, அணையை எம்எல்ஏ மட்டும் பார்வையிடலாம், பத்திரிகையாளர்கள் பார்வையிட அனுமதியில்லை என தமிழக பொதுப் பணித் துறை செயல் பொறியாளர் (பெரியாறு மண்டலம்) ஏ. மாதவன் கூறியுள்ளார்.
அப்போது, அங்கு வந்த கேரளத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் சிலர் மாதவனை தாக்கியதாக நாளேடுகளில் செய்திகள் வெளியாகின. இது தொடர்பாக கேரளத்தின் உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதேபோல, அணையைப் பார்வையிட வரும் கண்காணிப்புக் குழுவினருக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இது போன்ற சூழலில், மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை மூலம் அணையைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான உத்தரவை மத்திய அரசுக்கு பிறப்பிக்க வேண்டும்’ என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. -http://www.dinamani.com