14 இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது

14arrestedஇலங்கையின் வட-கடலில் நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் 14 இந்திய மீனவர்களை மூன்று படகுகளுடன் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

ஆரம்ப விசாரணைகளின் பின்னர் இவர்கள் ஞாயிறு மாலை யாழ். மாவட்ட கடற்தொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளரிடம் கையளிக்கப்பட்டிருப்பதாகக் கடற்படைப் பேச்சாளர் கமாண்டர் கோசல வர்ணகுலசூரிய பிபிசியிடம் தெரிவித்தார்.

இவர்களைப் பொறுப்பேற்ற கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் அவர்களை ஊர்காவற்துறை பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக யாழ் மாவட்ட கடற்தொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர் நடராஜா கணேசமூர்த்தி தெரிவித்தார்.

சுமார் இரண்டு மாதங்களின் பின்னர் இலங்கைக் கடற்பரப்பில் முதற்தடவையாக அத்துமீறி பிரவேசித்திருந்த 14 மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

யாழ் மாவட்டத்தில் மாத்திரம் கைதுசெய்யப்பட்ட மீனவர்களின் எண்ணிக்கை இந்த சம்பவத்துடன் 38 ஆக அதிகரித்திருப்பதாக யாழ் மாவட்ட கடற்தொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர் கணேசமூர்த்தி பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

மொத்தமாக 42 இந்திய மீனவர்களின் படகுகள் யாழ்ப்பாணத்தில் நீதிமன்றத்தினால் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டுள்ள 14 பேரின் விபரங்கள்

வி சரத்குமார் (20 வயது), என் நவீன் (17 வயது), ஆர் காளிமுத்து (42 வயது), ஜே தினேஷ்குமார் (14 வயது), கலைவாணன் (24 வயது), சதீஷ்குமார் (19 வயது), பன்னீர்செல்வம் (26 வயது), ராஜ்குமார் (19 வயது), விஜயேந்திரன் (23 வயது), டி தானிபேக்ஸ் (40 வயது), அர்ச்சுனன் (40 வயது), டல்பின் (35 வயது), சரவணன் (35 வயது), கலஞ்சிசன் (35 வயது)

“இலங்கையிடம் கெஞ்சுவதைவிட ஆழ்கடல் மீன்பிடிக்க உதவவேண்டும்”

இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிச்சென்று தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கும் பிரச்சனைக்கு நிரந்தரத்தீர்வுகாணவேண்டுமானால், தமிழக மீனவர்கள் ஆழ்கடலில் சென்று மீன்பிடிக்க இந்திய அரசும் தமிழக அரசும் உதவவேண்டும் என்கிறார் நிரபராதி மீனவர்விடுதலைக்கான கூட்டமைப்பைச் சேர்ந்த அருளானந்தம்.

இலங்கை கடற்பரப்பில் எல்லைதாண்டிச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடுமையாக கையாள்வதைப்போல இந்திய கடற்பரப்பிற்குள் எல்லைதாண்டிவந்து மீன்பிடிக்கும் இலங்கை மீனவர்களை இந்திய கடற்படையினர் கைதுசெய்து கடுமையாக நடத்தவேண்டும் என்றும் அருளானந்தம் தெரிவித்தார்.

இலங்கைக்கு போதை மருந்து கடத்தினார்கள் என்கிற குற்றச்சாட்டின்கீழ் இலங்கை நீதிமன்றத்தில் மரணதண்டனை விதிக்கப்பட்ட ஐந்து தமிழக மீனவர்கள் இந்திய அரசின் வற்புறுத்தலின்பேரில் விடுவிக்கப்பட்டு ஒரு வாரம் கூட முடியாத நிலையில் ஞாயிற்றுக்கிழமையன்று இந்திய மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை கைது செய்து அவர்களின் படகுகளை பறிமுதல் செய்திருப்பது உள்நோக்கம் கொண்ட செயல் என்று விமர்சித்த அருளானந்தம், எல்லைதாண்டிச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கையாள்வதைப்போலவே இந்திய எல்லைக்குள் வரும் இலங்கையின் தென்பகுதியைச் சேர்ந்த சிங்களமீனவர்களை இந்திய கடற்படையினர் கையாளவேண்டும் என்று அருளானந்தம் கூறினார். -BBC

TAGS: