தில்லி – சென்னை புல்லட் ரயில் சேவை: சீனாவில் உயர்நிலைக் குழு ஆலோசனை

தில்லி – சென்னை இடையே அதிவேக புல்லட் ரயில் சேவைக்கான வழித்தடம் அமைப்பது தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆராயவும், தொழில்நுட்ப ஆலோசனைகளைப் பெறவும் இந்திய ரயில்வேயின் உயர்நிலைக் குழுவினர், சீனாவில் முகாமிட்டுள்ளனர்.

இந்திய ரயில்வேயின் ரயில் விகாஸ் நிகம் நிறுவனத்தின் உயரதிகாரி சதீஷ் அகர்வால் தலைமையிலான உயர்நிலைக் குழு, பெய்ஜிங்குக்கு திங்கள்கிழமை வந்தது. அங்கு, சீனாவின் அதிவேக ரயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் அதிகாரிகளுடன் இந்தக் குழுவினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்தியா, தற்போது இரண்டு அதிவேக புல்லட் ரயில் சேவை வழித்தடங்களை அமைக்க நடவடிக்கை எடுத்துவருகிறது. இதில் ஒன்று, ஜப்பான் நாட்டின் உதவியுடன் மும்பை – ஆமதாபாத் இடையே அமைக்கப்படவுள்ளது. மற்றொன்று, சீன உதவியுடன் தில்லி – சென்னை இடையே அமைகிறது.

சீனாவின் பெய்ஜிங் – குவாங்க்ஸூ இடையே 2,298 கி.மீ. தொலைவுக்கு அமைந்துள்ள புல்லட் ரயில் வழித்தடம்தான் உலகிலேயே மிகவும் நீளமானதாகும்.

இந்தியாவில், சுமார் ரூ. 2 லட்சம் கோடி செலவில், தில்லி – சென்னை இடையே 1,754 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்படவுள்ள வழித்தடம், உலகின் இரண்டாவது மிக நீளமான புல்லட் ரயில் வழித்தடமாக இருக்கும்.

சீன அதிபர் ஜீ ஜின்பிங் கடந்த செப்டம்பர் மாதம் தில்லி வந்தபோது, இந்தியாவில் புல்லட் ரயில் சேவை தொடங்குவதற்கு ஒத்துழைப்பு வழங்க இரு நாடுகள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் அடிப்படையில், புல்லட் ரயில் சேவைக்கான சாத்தியக்கூறு ஆய்வை சீனா இலவசமாக செய்து தருகிறது.

மேலும், இந்திய ரயில்வேயின் 100 அதிகாரிகளுக்கு புல்லட் ரயில் சேவை தொடர்பான பயிற்சி தரவும், அதிவேக ரயில் சேவைக்குத் தகுந்தபடி பழைய ரயில் நிலையங்களை மேம்படுத்துவதுடன் புதிய நிலையங்களை அமைக்கவும்,இந்தியாவில் ரயில்வே பல்கலைக்கழகம் நிறுவுவதற்கு உதவவும் இந்த ஒப்பந்தம் வழிவகுக்கிறது.

இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகவே, இந்திய ரயில்வே உயரதிகாரிகள் குழு தற்போது சீனாவில் ஆலோசனை நடத்தி வருகிறது. இந்திய ரயில்வே அதிகாரிகளுக்கான பயிற்சி விரைவில் தொடங்கவுள்ளது. தில்லி – சென்னை புல்லட் ரயில் வழித்தடம் அமைப்பதற்கான பணிகள் அடுத்த ஆண்டில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தில்லி – சென்னை இடையே தற்போது இயக்கப்படும் விரைவு ரயிலான ராஜ்தானி எக்ஸ்பிரஸ் மூலம், பயண தூரத்தைக் கடக்க 28 மணி நேரம் பிடிக்கிறது. மணிக்கு 300 கி.மீ. வேகத்தில் செல்லும் புல்லட் ரயில் இயக்கப்பட்டால், இந்தப் பயண நேரம் வெறும் 6 மணி நேரமாகச் சுருங்கிவிடும் என்பது குறிப்பிடத் தக்கது. -http://www.dinamani.com

TAGS: