முல்லை பெரியாறு அணை தொடர்பாக கேரளா முதலமைச்சர் உம்மன் சாண்டி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக திருவனந்தபுரத்தில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி எதிர் கட்சி தலைவர் வி.எஸ். அச்சுதானந்தன் மாநில அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். சர்வதேச நிறுவனங்களை கொண்டு முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து மறு ஆய்வு செய்ய வேண்டும் என பிரதமரிடம் மனு அளிக்க கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
புதிய அணை கட்ட அனுமதிக்க வேண்டும் என்றும் கேரள அனைத்து கட்சி குழு பிரதமரிடம் முறையிட திட்டமிட்டுள்ளது. பிரதமரை சந்திக்க நேரம் கிடைத்தவுடன் கேரள குழு டெல்லி புறப்படும் என்று தெரிவிக்கப்படுள்ளது.
முல்லை பெரியாறு அணையில் 142 அடி வரை நீர்மட்டம் உயர்த்தப்பட்டுள்ளதால் சுற்று சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பசுமை தீர்ப்பாயத்தில் முறையிடவும் கேரள அரசு முடிவு செய்துள்ளது. அணையின் நீர்மட்டம் உயர்த்தப்படுவதால் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள 5.68 கி.மீ வனப்பகுதி நீரில் முழ்கி அழியும் அபாயம் உள்ளது என்றும் பசுமை தீர்ப்பாயத்தில் முறையிட கேரள திட்டமிட்டு உள்ளது.