“வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கருப்புப் பணத்தை 100 நாள்களுக்குள் மீட்பதாக பாஜக கூறவில்லை’ என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.
கருப்புப் பணத்தை மீட்பது குறித்து மக்களவையில் வியாழக்கிழமை எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த போது அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும், பாஜக-வின் தேர்தல் அறிக்கையில் கருப்புப் பணத்தை மீட்பதற்கான பணிக் குழு அமைக்கப்படும் என்றுதான் குறிப்பிட்டிருந்ததாக வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.
சமாஜவாதி கட்சித் தலைவரும், மக்களவை உறுப்பினருமான முலாயம் சிங் யாதவ் பேசியதாவது: “கருப்புப் பணத்தை மீட்பதன் மூலம் நாட்டிலுள்ள ஒவ்வொரு இளைஞனும், தனக்கு ரூ.15 லட்சம் கிடைக்கும் என நம்பிக் கொண்டிருந்தார்கள்; ஆனால் நீங்கள் (மத்திய அரசு) பொய்யை மட்டுமே மக்களுக்கு விற்பனை செய்து வருகிறீர்கள்; வெளிநாடுகளிலுள்ள இந்தியர்களின் கருப்புப் பணத்தை எப்போது மீட்கப் போகிறீர்கள் என்பதை தெளிவுபடுத்துங்கள். வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்களது விவரங்களை வெளியிட எவ்வளவு காலமாகும் என்பதை நீங்கள் (மத்திய அரசு) சொல்ல வேண்டும்’ என்றார் அவர்.
மார்க்சிஸ்ட், ஆம் ஆத்மி, தேசியவாத காங்கிரஸ், சிரோமணி அகாலி தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும், கருப்புப் பணத்தை மீட்பதாக பாஜக கூறிய வாக்குறுதி என்னவாயிற்று என்று கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்து வெங்கய்ய நாயுடு பேசியதாவது:
வெறும் 100 நாள்களுக்குள் கருப்புப் பணத்தை மீட்போம் என்று கூறும் அளவுக்கு நாங்கள் அறிவு முதிர்ச்சியில்லாதவர்கள் அல்லர். தேர்தல் அறிக்கையில் ஊழலைக் குறைப்போம்; கருப்புப் பணத்தை மீட்க பணிக் குழு அமைப்போம் என்றுதான் குறிப்பிட்டிருந்தோம்.
அதன் அடிப்படையில் வெளிநாடுகளிலுள்ள கருப்புப் பணத்தை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. 100 நாள்கள் என்று குறிப்பிட்டது, அதற்கான முயற்சிகளை முன்னெடுக்கத் தேவையான காலஅவகாசமே அன்றி, முழுப் பணத்தையும் மீட்பதற்காகக் கூறப்பட்ட காலக்கெடு அல்ல.
கருப்புப் பண விவகாரத்தில் நடவடிக்கை எடுக்குமாறு, கடந்த 2011-இல் காங்கிரஸ் அரசை உச்ச நீதிமன்றம் அறிவுறுத்திய பிறகும், அதன் பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
வெளிநாடுகளிலுள்ள கருப்புப் பணத்தை மீட்க உங்களிடம் (எதிர்க்கட்சிகள்) சிறந்த யோசனைகள் இருந்தால் அரசிடம் கூறுங்கள் என்றார் வெங்கய்ய நாயுடு.
-http://www.dinamani.com