காஷ்மீரில் ராணுவம் – பயங்கரவாதிகள் மோதல்: 10 பேர் பலி

  • ஜம்மு-காஷ்மீரின் ஆர்னியா பகுதியில் உள்ள பிண்டி கிராமத்தில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற மோதலின்போது ராக்கெட் லாஞ்சரைக் கொண்டு செல்லும் ராணுவ வீரர்.
  • ஜம்மு-காஷ்மீரின் ஆர்னியா பகுதியில் உள்ள பிண்டி கிராமத்தில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற மோதலின்போது ராக்கெட் லாஞ்சரைக் கொண்டு செல்லும் ராணுவ வீரர்.

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே வியாழக்கிழமை நடைபெற்ற கடும் துப்பாக்கிச் சண்டையில் 3 வீரர்கள், 4 பயங்கரவாதிகள், 3 அப்பாவிகள் என மொத்தம் 10 பேர் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தானில் இருந்து ராணுவச் சீருடை அணிந்த பயங்கரவாதிகள், ஜம்முவின் ரஜௌரி மாவட்டத்தில் உள்ள ஆர்னியா பகுதிக்குள் வியாழக்கிழமை காலை ஊடுருவினர். அவர்கள் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த வீரர்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதில் 3 வீரர்களும், அப்பாவி ஒருவரும் உயிரிழந்தனர். பதில் தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, ராணுவம், எல்லைப் பாதுகாப்புப் படை, மாநில போலீஸார் ஆகியோர் இணைந்து பயங்கரவாதிகளைத் தேடும் பணியில் கூட்டாக ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது:

ஆர்னியா பகுதியின் பிண்டி கட்டார் பகுதியில் உள்ள ராணுவத்தின் 2 பதுங்கு குழிகளை பயங்கரவாதிகள் ஆக்கிரமத்துக் கொண்டனர். இவை ராணுவத்தின் 92ஆவது காலாட்படைக்குச் சொந்தமானவையாகும். அங்கிருந்து பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர்.

அப்போது அவர்களுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இதில் 3 வீரர்கள், 4 பயங்கரவாதிகள், அப்பாவி ஒருவர் என மொத்தம் 10 பேர் இறந்தனர். 2 வீரர்கள் காயமடைந்தனர். அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றை ராணுவ வீரர்கள் கைப்பற்றினர். அது பயங்கரவாதிகளால் பயன்படுத்தப்பட்டதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

ஊடுருவல் முயற்சி முறியடிப்பு: இதனிடையே, ரஜௌரி மாவட்டத்தின் லாம் படைப்பிரிவுப் பகுதியில் வியாழக்கிழமை காலை 6.30 மணியளவில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சிலர் சுற்றித் திரிவதை ராணுவ வீரர்கள் கண்டனர்.

அங்கு விரைந்து சென்ற வீரர்கள், பாகிஸ்தானில் இருந்து இந்தியப் பகுதிக்குள் சில பயங்கரவாதிகள் நுழைய முயன்றதை முறியடித்தனர். ராணுவத்தைக் கண்டதும் அந்த பயங்கரவாதிகள் தப்பியோடினர். அவர்களில் ஒருவரை ராணுவத்தினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு ஏ.கே.47 ரக துப்பாக்கி, 30 தோட்டாக்கள், பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட ஒரு கைத்துப்பாக்கி, ரூ.8,100 மதிப்பிலான பாகிஸ்தான் ரூபாய் நோட்டு ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட அந்த பயங்கரவாதியின் பெயர் அதுல் கயூமி என்ற பஞ்சாபி என்று தெரிய வந்துள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

பிரதமர் நரேந்திர மோடி, ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்துக்காக வெள்ளிக்கிழமை ஜம்மு செல்ல உள்ள நிலையில் பயங்கரவாதிகளின் இந்தத் தாக்குதலும், ஊடுருவல் முயற்சியும் நடைபெற்றுள்ளன. -http://www.dinamani.com

TAGS: