ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைந்து தற்போது நாடு திரும்பியுள்ள அரீப் மஜீத் என்ற வாலிபர் அந்த அமைப்பை பற்றி கூறியுள்ளார்.
சிவில் என்ஜீனியரிங் மாணவரான மஜீத், ஈராக் போய்ச் சேர்ந்ததும் பல்வேறு கடினமான வேலைகளைச் செய்யுமாறு பணிக்கப்பட்டுள்ளார்.
நான் வேலை பார்க்க வரவில்லை, போரிடவே வந்ததாக கூறியுள்ளார். ஆனால் துப்பாக்கிப் பயிற்சியின்போது அவர் காயமடைந்துள்ளார்.
ஆனால் அவர்கள் உதவவில்லை, சொர்க்கத்தில் இருக்கலாம் என நினைத்துச் சென்றேன். ஆனால் நரகம் போல உணர்ந்தேன் என்று கூறியுள்ளார்.
யாரும் யாருக்கும் அங்கு ஆதரவாக இல்லை. குரூரமே மேலோங்கியிருந்தது. இதனால்தான் அங்கிருந்து தப்பி வர வேண்டும் என்ற முடிவுக்கு தான் வந்ததாக கூறியுள்ளார்.
ஒரு மசூதிக்கு நான் நண்பர்களுடன் போயிருந்தேன். அது 2013ம் ஆண்டின் இறுதியில் நடந்தது. அங்கு போனபோது ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது.
சிரியாவில் நடந்த போரை நான் பார்க்க விரும்பினேன். ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு புதிய இஸ்லாமிய நாட்டை உருவாக்குவதாக நான் கருதினேன். எனது மக்களுக்காக ஏதாவது செய்ய விரும்பினேன். மதத்தைக் காக்க ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் தினந்தோறும் போராடி வருவதாக உணர்ந்தேன்.
அப்போதுதான் இந்த அமைப்பில் இணைந்து போராட வேண்டும் என்ற உணர்வு எனக்குள் எழுந்தது. ஆனால் யார் மூலம் அங்கு போவது, இணைவது என்பது எனக்குத் தெரியவில்லை. பல மணி நேரம் இதற்காக இணையதளத்தில் நான் மூழ்கிக் கிடந்தேன்.
பல முக்கியமான தகவல்களைச் சேகரித்தேன். கிட்டத்தட்ட 1000க்கும் மேற்பட்ட இணையதளங்களுக்குப் போய்ப் பார்த்திருப்பேன். முடிவில், நான் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைவதற்கான சாத்தியத்தைக் கண்டுபிடித்தேன்.
இந்தியத் தொடர்பு மகாராஷ்டிர மாநிலம் பிவான்டியில் ஒருவர் இருக்கிறார். அவருடன் தொடர்பு கொண்டேன். அவரது தொலைபேசி எண்ணை இணையத்தில் கண்டுபிடித்துத் தொடர்பு கொண்டேன். அவர் ஒரு ஏஜென்ட்.
அவர் முதலில் எனது போனை எடுக்கவில்லை கிட்டத்தட்ட 20 முறை முயற்சித்தேன். பல குறுஞ்செய்திகளையும் அனுப்பினேன். ஆனால் கடும் போராட்டத்திற்குப் பின்னரே அவரை பிடிக்க முடிந்தது.
அவர் பிவான்டியில் ஒருவரைப் பார்க்கச் சொன்னார். அவர் நிதியுதவி உள்பட அனைத்தையும் செய்வதாக தெரிவித்தார். அனைத்தும் முடிந்த பிறகு, தெற்கு மும்பையில் உள்ள டோங்கிரி பகுதிக்குப் போய் தேவையான ஆவணங்களைப் பெற்றுக் கொள்ளுமாறு கூறினார்.
அதன் பின்னர் மே 25ம் திகதி ஈராக் கிளம்பிச் சென்றோம். கர்பலாவுக்கு முதலில் போனோம். பின்னர் 27ம் திகதி பாக்தாத் பயணமானோம். அங்கிருந்து ஹிந்த் முகாமுக்கு அனுப்பப்பட்டோம்.
அங்கு எங்களது வேலைகள் என்ன என்பது கூறப்பட்டது. எதிர்பார்த்த வேலை தரப்படவில்லை முதலில் எங்களைப் போரில் ஈடுபடுத்தவில்லை. காரணம், இந்தியர்கள் உடல் அளவில் பலவீனமானவர்கள் என்று கூறி போரிட அனுப்பவில்லை.
இருப்பினும் எங்களுக்கு ஒரு வாய்ப்பு தருமாறு வலியுறுத்தினோம். ஆனால் அவர்கள் வைத்த அனைத்து சோதனையிலும் நாங்கள் தோல்வி அடைந்தோம். பின்னர் கட்டுமானப் பணிக்கு என்னை அனுப்பினர். நான் சூப்பர்வைசராக இருந்தேன். மற்ற மூவரும் இணையதளங்களை உருவாக்கும் வேலையில் ஈடுபடுத்தப்பட்டனர்.
போரில் ஈடுபட்டிருந்த மற்றவர்களின் கழிப்பறைகளைச் சுத்தம் செய்வது, குடிநீர் எடுத்துத் தருவது போன்ற வேலைகளையும் நாங்கள் செய்ய வேண்டி வந்தது.
கொலை செய்வது, பாலியல் பலாத்காரம் செய்வது இதுதான் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினருக்கு தெரிந்த ஒரே வேலை.
இதையெல்லாம் நேரில் பார்த்தபோது நாங்கள் முற்றிலும் உடைந்து போனோம். எங்களது கற்பனை எல்லாம் தகர்ந்து போனது, எல்லாம் மாயை போல தெரிந்தது.
அவர்கள் புனிதப் போரில் ஈடுபட்டிருப்பதாக நினைத்தோம். ஆனால் அது அப்படி இல்லை. இந்தப் போரால் எந்தப் பயனும் கிடைக்காது என்பது தெரிந்தது.
போர்க்களத்திற்குச் செல்லக் கூட எங்களுக்கு அனுமதி இல்லை. நான் துப்பாக்கிப் பயிற்சியின்போது காயமடைந்தபோது யாரும் எங்களுக்கு உதவவில்லை. மருத்துவமனைக்கு அனுப்பியதோடு சரி. எங்களைப் பற்றிக் கவலைப்படக் கூட இல்லை.
உடனடியாக மருத்துவ உதவியும் கூட கிடைக்கவில்லை. பலரை சிகிச்சை தராமலேயே சாகடித்து விடுகின்றனர். திருப்பி அனுப்புமாறு கெஞ்சினேன் என்னை மருத்துவமனைக்கு அனுப்புமாறு நான் பலமுறை கெஞ்சிய பிறகே அனுப்பிவைத்தனர்.
முதலில் துருக்கிக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அங்கு எனக்கு சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர்களுக்குத் தெரியாமல் நான் எனது வீட்டுக்குப் போன் செய்தேன்.
பெற்றோரிடம் பேசியபோது அழுதேன், திரும்பி வர விரும்புவதாக கூறினேன்.
அவர்கள் தேசிய புலனாய்வு ஏஜென்சி உள்ளிட்டோருடன் தொடர்பு கொண்டு என்னை மீட்க முயற்சித்தனர் என்று கூறியுள்ளார்.
மஜீத்திடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. மஜீத்துடன் சென்ற மற்ற மூவரையும் மீட்கும் முயற்சிகளும் தொடர்கின்றன.
மேலும் இந்த பிவான்டி நபரைப் பிடிக்கும் முயற்சியிலும் புலனாய்வுத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். -http://www.newindianews.com