புது டெல்லி, டிச.2- ஜம்மு-காஷ்மீர் எல்லையோரம் உள்ள சுமார் 78 ஆயிரம் சதுர பரப்பளவு கொண்ட இந்திய பகுதியை பாகிஸ்தான் அத்துமீறி ஆக்கிரமித்துள்ளதாக மத்திய உள்துறை இணை மந்திரி கிரன் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
1948-ம் ஆண்டுக்கு பின்னர் ஜம்மு-காஷ்மீர் எல்லையோரம் உள்ள சுமார் 78 ஆயிரம் சதுர பரப்பளவு கொண்ட இந்திய பகுதியை அத்துமீறலாக பாகிஸ்தான் ஆக்கிரமித்து கொண்டதாக பாராளுமன்றத்தில் இன்று அவர் அறிவித்தார்.
இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது:-
1963-ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தான்-சீனாவுக்கிடையிலான எல்லை ஒப்பந்தத்துக்கு பின்னர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் மற்றும் சீனாவுக்கிடையிலான இந்திய எல்லைப்பகுதிக்குள் சுமார் 5,180 சதுர கிலோ மீட்டர் தூரம் வரை பாகிஸ்தான் கைப்பற்றிக்கொண்டது.
இந்தியா-சீன எல்லையைப் பொருத்த மட்டில் நிலையான எல்லைக்கோடு என்று எதுவும் வரையறுக்கப்படாததால் சிறு பேதங்களால் அவ்வப்போது சில சூழல்கள் ஏற்படுகின்றன. பொதுவான எல்லைக்கோடு என்று வரையறுக்கப்பட்டிருந்தால் இவை தவிர்க்கப்பட்டிருக்கலாம்.
வங்காள தேசம், மியான்மர், பூடான் போன்ற நாடுகள் அத்துமீறலாக இந்திய எல்லையோர பகுதிகளில் எவ்வித ஆகிரமிப்புகளிலும் ஈடுபடவில்லை.
எனினும், இந்தியா மற்றும் வங்காள தேசத்துக்கிடையிலான எல்லைப்பகுதியின் ஓரமுள்ள சில பகுதிகளில் வசிக்கும் ஒரு நாட்டை சேர்ந்த சிலர், இன்னொரு நாட்டின் நிலப்பரப்பில் சிறுபகுதியை கைப்பற்றி அனுபவித்து வருகின்றனர். இது இரு தரப்பிலும் பொதுவாக நடைமுறையில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
-http://www.maalaimalar.com