கருப்பு பணத்தில் ஒரு சல்லி காசு கூட விடாமல் இந்தியாவுக்கு கொண்டு வர முயற்சி எடுப்பேன்: மோடி

narandra-modiபுதுடெல்லி: வெளிநாடுகளில் பதுக்கியுள்ள கருப்பு பணத்தில் ஒரு சல்லி காசு கூட விடாமல் இந்தியாவுக்கு கொண்டு வர முயற்சி எடுப்பேன் என பிரதமர் நரேந்திர மோடி உறுதி பட தெரிவித்துள்ளார். பிரதமராக நரேந்திர மோடி கடந்த மே மாதம் பொறுப்பேற்ற பிறகு எனது அரசாங்கம் என்ற இணைய தளத்தின் மூலமாக பொதுமக்களிடம் கருத்து கேட்க முடிவு செய்து புதிதாக வலைத்தளம் ஒன்றையும் தொடங்கினார்.

அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் ரேடியோ மூலமாகவும் மக்களிடம் தனது கருத்துகளை பகிர்ந்து கொள்ள போவதாக தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து இன்று இரண்டாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி ஆல் இந்தியா ரேடியோவில் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது: கடந்த முறை நான் உங்களோடு சில விஷயங்களை பகிர்ந்துகொள்ள முடிந்தது. தற்போதும் சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கியுள்ள கருப்பு பணத்தில் ஒரு சல்லிகாசு கூட விடாமல் இந்தியா கொண்டு வர மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. தற்போது உள்ள அரசுக்கும் சரி, இதற்கு முந்தைய அரசுக்கும் சரி, உங்களுக்கும் சரி வெளிநாடுகளில் எவ்வளவு பணம் துல்லியமாக பதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தெரியாது. அது எவ்வளவாக இருந்தாலும் சரி அவை அனைத்தையும் இந்தியாவுக்கு கொண்டு வருவேன்.

தேர்தல் பிரசாரத்தில் அளித்த வாக்குறுதியின்படி பாஜ பதவியேற்று 100 நாட்களில் கருப்பு பணத்தை மீட்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. 1000 மாற்று திறன் மாணவர்களுக்கு சிறப்பு கல்வி உதவி தொகையை மத்திய மனித வளத்துறை வழங்கும். கேந்திரிய வித்யாலாயா மற்றும் மத்திய பல்கலை கழகங்களில் மாற்று திறன் மாணவர்களின் வசதிக்காக உள்கட்டுமான பணியை மேற்கொள்ள ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். -http://www.dinakaran.com

TAGS: