பெரியாறு அணை நீர்த்தேக்க உயரம்: கேரள அரசின் மறுசீராய்வு மனு தள்ளுபடி

supreme_court_india

இந்திய உச்சநீதிமன்றம்

பெரியாறு அணை விவாகாரம் தொடர்பாக கேரளா மாநில அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுவை இந்திய உச்சநீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது.

பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த அளிக்கப்பட உத்தரவு சரியானதுதான் என்று கூறியுள்ள நீதிமன்றம், இதனால் கேரளா அரசின் மறு சீராய்வு மனு மீதான விசாரணை தேவையற்றது என்றும் கூறியது.

ஆர்.எம். லோதா தலைமையிலான ஐந்து நீதிபதிகளை உள்ளடக்கிய அரசியல் சாசன அமர்வு, கடந்த மே மாதம் 7 ஆம் தேதி அன்று பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக கேரள அரசு இந்த மனுவைத் தாக்கல் செய்தது.

அரசிய சாசன அமர்வின் உத்தரவில், தமிழக அரசின் உரிமையை பறிக்க கேரளா அரசுக்கு அதிகாரம் இல்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் கேரளா அரசு இந்த விவகாரத்தில் புதிய சட்டத்தை நிறைவேற்றி தமிழக அரசை கட்டுப்படுத்த முடியாது என்றும் அதனால் கேரளா அரசு வகுத்த சட்டம் செல்லாது என்றும் நீதிமன்றம் அப்போது கூறியிருந்தது.

இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிராக இவ்வாறு புதிய சட்டங்களை மாநில அரசுகள் வகுப்பது தவறு என்றும் தெரிவித்திருந்த உச்சநீதிமன்றம், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் அணையின் நீர் மட்டத்தை 142 அடிக்கு உயர்த்துவதை உறுதிசெய்தது.

இதனைத்தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் 30 ஆம் தேதியன்று கேரள அரசு தரப்பு வழக்கறிஞர் ரமேஷ் பாபு இதனை எதிர்த்து மறு சீராய்வு மனு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

திறந்த நீதிமன்ற விசாரணைக்கு கோரப்பட்டிருந்த அந்த மனுவில், நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையிலான ஐவர் குழு இறுதிசெய்து வழங்கிய ஆய்வறிக்கையும் தவறென்று குறப்பட்டிருந்தது.

மேலும் முல்லை பெரியாறு அணையின் கொள்ளளவை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்த தமிழகத்துக்கு அனுமதி வழங்கியதன் மூலம் அணையின் கீழ் பகுதிகளில் வாழும் மக்களின் பாதுக்காப்புக்கு சவால் விடப்பட்டுள்ளதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை தற்போது உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதால், அணையில் 142 அடிக்கு நீர்த் தேக்குவது உறுதிசெய்யப்பட்டுள்ளது. -BBC

TAGS: