ஜார்க்கண்ட் மாநிலத்தில் 3வது கட்டமாக டிசம்பர் 9ம் தேதி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். ராஞ்சிக்கு சிறப்பு விமானம் மூலம் காலை 10 மணிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, ஹசாரிபாக் தொகுதியில் மட்வாரில் உள்ள காந்தி மைதானத்தில் பிரசார உரை நிகழ்த்தினார்.
இந்திய ஜனநாயகத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். காஷ்மீரில் பயங்கரவாதிகள் நேற்று நடத்திய மோசமான தாக்குதல் இந்தியாவின் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். நேற்றைய தாக்குதலில் உயிரிழந்த ஜார்கண்ட் வீரர் சங்கல்ப் குமார் சுக்லாவின் தியாகம் போற்றுதலுக்குரியது. பயங்கரவாதிகள் இந்தியாவின் ஜனநாயகத்தை சிதைக்க முயல்கிறார்கள் என பேசினார்.
ஜம்மு காஷ்மீரில் வெள்ளிக்கிழமை அன்று ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் குறித்து பேசிய பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
உயிரிழந்த வீரர்களுக்கு நாட்டு மக்கள் அனைவரும் வீரவணக்கம் செலுத்துகிறார்கள்: நரேந்திர மோடி
ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற இரண்டு கட்ட தேர்தல்களிலும் 70 சதவிகிதத்திற்கும் மேலான வாக்குகள் பதிவாகி உள்ளன. 3ம் கட்ட தேர்தல் வரும் 9ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தநிலையில் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளனர்.
யூரி செக்டார் பகுதியில் ராணுவ முகாம் மீது குறி வைத்து நடத்திய தீவரவாதிகளின் தாக்குதலில் 7 ராணுவ வீரர்கள், 3 காவல்துறையினர் உயிரிழந்தனர். இதேபோல் ஷோப்பியான், மொஹரம், ஸ்ரீநகர் ஆகிய பகுதிகளிலும் தாக்குதல் நடந்தது. இதில் மொத்தம் 23 பேர் உயிரிழந்தனர். 6 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த வீரர்களுக்கு ராணுவ தளபதி தன்பீர்சிங் இன்று அஞ்சலி செலுத்துகிறார். இதற்காக அவர் காஷ்மீர் பயணம் மேற்கொள்கிறார்.
தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்த வீரர்களுக்கு நாட்டு மக்கள் அனைவரும் வீரவணக்கம் செலுத்துவதாக தெரிவித்துள்ளார்.
தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்களம் கொடுப்பதாக குற்றம் சாட்டினார். தீவிரவாதிகளை பாகிஸ்தான் கட்டுப்படுத்த வேண்டும். அவ்வாறு கட்டுப்படுத்த முடியாவிட்டால், அந்நாட்டுக்கு உதவ இந்தியா தயராக இருப்பதாக தெரிவித்தார்.
இந்திய – பாக். நிலையில் இந்திய ராணுவத்தினர் மீது தீவிரவாதிகள் தாக்குதல்: அமெரிக்கா கடும் கண்டனம்
இந்திய பாகிஸ்தான் நிலையில் இந்திய ராணுவத்தினர் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்திய எல்லையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி ராணுவ வீரர்களை கொன்றது தொடர்பாக பேசிய அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாளர் மேரி ஹாப், காஷ்மீரை மையமாக வைத்து நடைபெறும் வன்முறை தங்களுக்கு கவலை அளிப்பதாக உள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்காவின் கொள்கையில் எந்தவித மாற்றமும் இல்லை. காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானும், இந்தியாவும் பேச்சுவார்த்தை நடத்துவது மட்டுமே நோக்கமாக கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.