43 இந்திய மீனவர்கள் கைது

இலங்கையின் வடக்கே நெடுந்தீவு கடற்பரப்பில் செவ்வாய்க்கிழமை 43 இந்திய மீனவர்கள் கடற்டையினரால் கைது செய்யப்பட்டிருப்பதாக கடற்படைப் பேச்சாளர் தெரிவித்திருக்கின்றார்.

இவர்களை காங்கேசன்துறைக்குக் கொண்டு வந்துள்ள கடற்படையினர் காவல்துறையினரிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகவும் அவர் கூறியிருக்கின்றார்.

fishermen_release
இலங்கையால் விடுவிக்கப்பட்ட இந்திய மீனவர்கள். (ஆவணப் படம்)

 

இரண்டு வாரங்களுக்கு முன்னர், கடந்த மாதம் 23 ஆம் திகதி இதே கடற்பகுதியில் வைத்து 14 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தார்கள். அதன் பின்னர் அந்தப் பகுதியில் மீன்பிடித்த 43 பேர் இன்று கைது செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது.

இது குறித்து விபரம் தெரிவித்த யாழ் மாவட்ட கடற்தொழில் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் நடராஜா கணேசமூர்த்தி, 43 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது குறித்து கடற்படையினர் தங்களுக்குத் தகவல் தெரிவித்திருப்பதாகவும், அவர்களைப் பொறுப்பேற்று நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

விடுதலை

யாழ் மாவட்டக் கடற்பரப்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள 38 இந்திய மீனவர்கள் யாழ் சிறைச்சாலைகளில் வைக்கப்பட்டிருக்கின்றார்கள். இவர்கள் தங்களை விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டிருக்கின்றது.

இவர்களின் கோரிக்கை குறித்து கொழும்பில் உள்ள தமது உயரதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளதாகக் குறிப்பிட்ட யாழ் மாவட்ட கடற்தொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர் கணேசமூர்த்தி இந்த மீனவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் கூறினார். -BBC

TAGS: