மும்பை தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட லஷ்கர் இ தொய்பா அமைப்பின் கமாண்டர் ஜாகிர் உர் ரஹ்மான் லாக்விக்கு ஜாமீன் வழங்கி பாகிஸ்தானின் தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த 2010-ம் ஆண்டு, மும்பையில் கடல் வழியாக நுழைந்த 10 பயங்கரவாதிகள் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தினர். இதில் வெளிநாட்டினர் உள்பட 162 பேர் பலியாகினர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாகிர் உர் ரஹ்மான் லாக்வி ராவல்பிண்டி சிறையில் அடைக்கப்பட்டார்.
மும்பை தாக்குதல் தொடர்பாக அப்துல் வாஜித், மஸார் இக்பால், அமின் சாதிக், ஜமீல் ரியாஸ், ஜமீல் அஹமது, யூனிஸ் அஞ்சுமான் ஆகிய 7 பேர் மீது தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது.
லாக்வி சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அவருக்கு ஜாமீன் வழங்க அந்நாட்டு புலனாய்வு நிறுவனம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இருப்பினும், ஜாமீன் வழங்கப்பட்டது.
மும்பை தாக்குதல் வழக்கை பாகிஸ்தான் துரிதப்படுத்த வேண்டும் என இந்தியா பலமுறை வலியுறுத்திவரும் நிலையில், முக்கிய குற்றவாளியாக கருதப்படுபவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
-http://www.newindianews.com
லக்வி ஜாமீன்: உடனே ரத்து செய்ய இந்தியா வலியுறுத்தல்
மும்பை தாக்குதல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தின் முக்கியத் தலைவரான ஜகியுர் ரஹ்மான் லக்விக்கு ஜாமீன் கிடைத்ததற்கு, பாகிஸ்தான் அரசின் செயல்பாடே காரணம் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து தில்லியில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை அவர் கூறியதாவது:
மும்பை தாக்குதல் வழக்கில் ஜகியுர் ரஹ்மான் லக்விக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருப்பது துரதிருஷ்டவசமானது. இதற்கு பாகிஸ்தான் அரசின் செயல்திறனில் உள்ள குறைபாடுகளும் காரணமாக இருக்கலாம்.
பாகிஸ்தான் பள்ளியில் தலிபான் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் 132 குழந்தைகள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நிகழ்ந்த மூன்றே நாள்களில் பாகிஸ்தான் நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கவில்லை.
லக்வி மீதான குற்றச்சாட்டுகளுக்குப் போதுமான ஆதாரங்கள் இல்லை என அவருக்கு ஆதரவாக வாதாடிய வழக்குரைஞர் ரிஸ்வான் அப்பாஸி நீதிமன்றத்தில் கூறியிருக்கிறார். குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக ஏராளமான ஆதாரங்களை இந்தியா வழங்கியுள்ளது என்பதுதான் உண்மை.
இந்தியாவில் மும்பை தாக்குதல் வழக்கு மிகவும் கவனமாகவும், விரைவாகவும் நடத்தப்பட்டு, பிடிபட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாப்புக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
ஆனால், பாகிஸ்தானில் அவ்வாறு இந்த வழக்கு நடத்தப்படவில்லை. பயங்கரவாதம் ஒழியும் வரை அதனை எதிர்த்து அரசு போராடும் என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார்.
எனவே, லக்விக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி அந்நாட்டு அரசு, உயர் நீதிமன்றங்களை அணுகும் என நம்புகிறேன். இந்திய அரசால் தேடப்பட்டு வரும் பாகிஸ்தான் வசமுள்ள பயங்கரவாதிகளை அந்நாடு உடனே ஒப்படைக்க வேண்டும் என்றார் ராஜ்நாத் சிங்.
முன்னதாக, இந்தியாவுக்கு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி ஹஃபீஸ் சயீது மிரட்டல் விடுத்தது குறித்து கேள்விக்கு ராஜ்நாத் சிங் பதிலளிக்கையில், “யாருடைய மிரட்டலுக்கும் இந்தியா பயப்படாது’ என்றார்.
இதனிடையே, இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் சையது அக்பருதீன் கூறியதாவது:
நூற்றுக்கணக்கான அப்பாவிகளின் உயிரைப் பறித்த மும்பை தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டியவரான லக்விக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருப்பதை ஏற்றுக்கொள்ள இயலாது. சர்வதேசப் பயங்கரவாதி என ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையால் அறிவிக்கப்பட்ட ஒருவரை எவ்வாறு ஜாமீனில் விடுவித்தனர் எனத் தெரியவில்லை. அவரது ஜாமீனை ரத்து செய்ய தேவையான நடவடிக்கைகளை உடனே எடுக்குமாறு பாகிஸ்தான் அரசை இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது என்றார் அவர்.
-http://www.dinamani.com