இந்தியாவை ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவரான அமித் ஷா, கட்டாய மதமாற்றத்தை தடைசெய்ய புதிய சட்டம் வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
கட்டாய மதமாற்றம் இந்தியாவில் மிகவும் சர்ச்சைக்குரிய விவகாரமாக இருந்துவருகிறது.
கட்டாய மதமாற்றத்துக்கு எதிரான நாட்டின் ஒரே கட்சி பாஜகதான் எனக் கூறிய அமித்ஷா, புதிய சட்டம் இயற்றப்படுவதற்கு மற்ற கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டுமென வலியுறுத்தினார்.
இந்த விவகாரம் நாடாளுமன்ற கூட்டத்தொடரை முடங்கச் செய்திருந்தது.
அண்மைய காலங்களில் ஆட்கள் இந்து மதத்துக்கு கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதை பாஜக மறைமுகமாக ஆதரித்து என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.
டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தன்று உத்தர பிரதேசத்தின் அலிகரில் பெருமளவானவர்கள் இந்து மதத்துக்கு மாறுகின்ற நிகழ்ச்சி ஒன்றை நடத்தப்படுவதாக இருந்து பின்னர் அது ரத்து செய்யப்பட்டிருந்தது.
அதற்கு முன்பாக ஆக்ராவில் 57 முஸ்லிம் குடும்பங்கள் இந்து மதத்துக்கு மாற்றப்பட்டதாக கூறிய சம்பவமும் சர்ச்சையைத் தோற்றுவித்திருந்தது.
இலவச உணவு கல்வி போன்றவை தருவதாக ஆசைகாட்டிய, அல்லது வன்முறை வரும் என்று அச்சுறுத்தப்பட்டோ மதமாற்றத்துக்கு அனுமதி வாங்கப்படுகிறது என்று குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன. -BBC