காஷ்மீரில் கூட்டணி அரசு: பாஜகவுக்கு பிடிபி நிபந்தனை

ஜம்மு-காஷ்மீரில் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து அரசமைப்பதற்கு, சில நிபந்தனைகளை மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) சனிக்கிழமை விதித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவை பாதுகாப்பது; ஆயுதப் படையினருக்கு சிறப்பு அதிகாரங்கள் அளிக்கும் சட்டத்தை வாபஸ் பெறுவது தொடர்பாக உறுதிமொழி அளிக்க வேண்டும் என்பது இதில் முக்கிய நிபந்தனைகளாகும்.

370ஆவது சட்டப்பிரிவை நீக்கக் கூடாது என்ற தங்கள் கட்சியின் நிலைப்பாட்டில் எந்த சமரசமும் செய்து கொள்ளப்பட மாட்டாது என்றும் பிடிபி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் நயீம் அக்தர், ஸ்ரீநகரில் பிடிஐ செய்தியாளரிடம் சனிக்கிழமை கூறியதாவது:

பாஜகவுடன் கூட்டணி சேர்வது உள்பட மாநிலத்தில் அரசமைப்பதற்குத் தேவையான அனைத்து வழிமுறைகளையும் பிடிபி பரிசீலித்து வருகிறது. சில விவகாரங்களில் எங்கள் கட்சிக்கு என்று தனி நிலைப்பாடு உள்ளது. “”ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்துள்ள அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவில் எந்த சமரசமும் செய்து கொள்ளக் கூடாது; காஷ்மீரில் ஆயுதப் படையினருக்கு சிறப்பு அதிகாரங்கள் அளிக்கும் சட்டம் திரும்ப பெறப்பட வேண்டும்” ஆகியவை எங்கள் கட்சியின் முக்கிய செயல் திட்டங்களாகும். இதில், எங்கள் கட்சி எவ்வித சமரசமும் செய்து கொள்ளாது.

இதை ஏற்பதாக உறுதிமொழி அளிக்கும் கட்சியுடன் பிடிபி கூட்டணி அமைக்க சாத்தியமுள்ளது. அது எந்தக் கட்சி ஆனாலும் சரி என்றார் அவர்.

முதல்வர் பதவியை சுழற்சி முறையில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று, பிடிபி கட்சியுடன் கூட்டணி சேரும் கட்சிகள் கேட்டால், அதுகுறித்து பரிசீலிக்கப்படுமா? என நயீம் அக்தரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளிக்கையில், “பேச்சுவார்த்தை அந்த நிலைக்கு இன்னும் செல்லவில்லை’ என்றார்.

ஆனால், பிடிபி விதித்துள்ள நிபந்தனைகளை பாஜக ஏற்குமா? எனத் தெரியவில்லை. தனது நிபந்தனைகளை பாஜக ஏற்கவில்லையென்றால், 15 உறுப்பினர்களைக் கொண்ட தேசிய மாநாட்டுக் கட்சி, 12 உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரஸ் ஆகியவற்றின் ஆதரவை பிடிபி ஏற்கலாம் எனத் தெரிகிறது. ஏனெனில், பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் அதே வேளையில், அந்த 2 கட்சிகளுடனும் பிடிபி தொடர்பில் உள்ளது.

பாஜகவின் திட்டம்: அதேசமயம், பிடிபியுடன் உடன்பாடு ஏற்படவில்லையென்றால், ஆளுநரை வரும் 1ஆம் தேதி சந்திக்கும்போது தங்களுக்கு 30 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதற்கான கடிதங்களை அளித்து, மாநிலத்தில் அரசமைக்க தங்களை முதலில் அழைக்க வேண்டும் என பாஜக கோரலாம் என்றும் கூறப்படுகிறது.

அதுபோன்ற சூழ்நிலை ஏற்பட்டால், பிடிபி தங்களுக்கு தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ் உறுப்பினர்களையும் சேர்த்து 55 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதற்கான கடிதங்களை ஆளுநரிடம் அளிக்கும் எனத் தெரிகிறது.

இந்நிலையில், தில்லியில் பாஜக பொதுச் செயலாளர் ராம் மாதவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அரசமைக்கும் நடவடிக்கையில், பாஜக ஈடுபட்டுள்ளது. பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது’ என்றார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

சிறந்த கூட்டணியால்தான், மாநிலத்தில் நிலையான அரசைத் தர முடியும். எனவே, எது சிறந்த கூட்டணி என்பதை ஆராய்ந்து வருகிறோம். மாநிலத்தில் பாஜகவுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. தேர்தலில் அதிக வாக்குகளை பாஜக பெற்றுள்ளது. பேரவையில் அதிக இடங்களை பெற்று 2ஆவது கட்சியாக உள்ளது.

மக்கள் தீர்ப்புப்படி, மாநிலத்தில் நல்ல அரசு அமைக்க பிடிபி, தேசிய மாநாட்டுக் கட்சி போன்ற கட்சிகளுடன் சேர்ந்து முயற்சிகள் எடுப்போம். அதற்கான வழியைக் கண்டறிய வேண்டியுள்ளது. ஏனெனில், பிற கட்சிகளின் ஆதரவின்றி அரசமைக்க முடியாதென்ற நிலை, மாநிலத்தில் தற்போது உள்ளது என்றார் அவர்.

முன்னதாக, ஜம்மு-காஷ்மீரில் பிடிபி ஆட்சியமைப்பதற்கு வாய்மொழியாக தனது ஆதரவை தேசிய மாநாட்டுக் கட்சியின் செயல் தலைவர் ஒமர் அப்துல்லா அறிவித்திருந்தார்.

இந்நிலையில், லண்டனில் சிகிச்சை பெறும் தனது பெற்றோரைக் காண்பதற்காக அவர் சனிக்கிழமை புறப்பட்டுச் சென்றார். புத்தாண்டுக்குப் பிறகே, அவர் நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

-http://www.dinamani.com

TAGS: