தாவூத் இப்ராஹிமை ஒப்படையுங்கள்: பாகிஸ்தானிடம் இந்தியா வலியுறுத்தல்

கடந்த 1993இல் மும்பையில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பில் முதல் குற்றவாளியான நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பாகிஸ்தானை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து புது தில்லியில் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

தாவூத் இப்ராஹிம், பாகிஸ்தானில்தான் இருக்கிறார் என்பதிலும், அவர் கராச்சியில் வாழ்கிறார் என்பதிலும் மத்திய அரசு தெளிவாக இருக்கிறது.

இதனால் அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அரசிடம் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறோம்.

இதுதொடர்பான ஆதாரங்களை பாகிஸ்தான் அரசுக்கு இந்தியா முன்பே அனுப்பி வைத்து விட்டது. அதனால் பாகிஸ்தான் அரசு தற்போது அவரை இந்தியாவிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.

தீவிரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கையில் பாகிஸ்தான் அரசு தீவிரம் காட்டுவதாக இருந்தால் அந்நாட்டு அரசு இந்த விஷயத்தில் இந்தியாவுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

தாவூத் இப்ராஹிம் இந்திய அரசால் தேடப்படும் மிக முக்கிய பயங்கரவாதியாவார் என்று அமைச்சர் ரிஜிஜு தெரிவித்தார்.

அவரிடம், இந்தியா எப்போது தாவூத் இப்ராஹிமைப் பிடிக்கும் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “பொறுத்திருந்து பாருங்கள்’ என்று அவர் பதிலளித்தார்.

தாவூத் இப்ராஹிம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த மாதம் கூறுகையில், “இந்தியாவால் தேடப்படும் முக்கிய பயங்கரவாதி தாவூத் இப்ராஹிமுக்கு பாகிஸ்தான் புகலிடம் அளித்துள்ளது. அவர் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் தங்கியிருக்கிறார்’ என்று தெரிவித்திருந்தார்.

மத்திய அரசால் தேடப்படும் தாவூத் இப்ராஹிம், மும்பையில் 1993இல் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பிற்கு சதித் திட்டம் தீட்டியவராவார். இந்தச் சம்பவத்தில் 300 பேர் உயிரிழந்தனர்.

-http://www.dinamani.com

TAGS: