பெங்களூரில் குண்டு வெடிப்பு: சென்னையைச் சேர்ந்த பெண் பலி

  • குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் ஆய்வு செய்யும் போலீஸார்.
    குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் ஆய்வு செய்யும் போலீஸார்.

 

பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு நிகழ்ந்த குண்டு வெடிப்பில் சென்னையைச் சேர்ந்த பெண் உயிரிழந்தார். மேலும் 2 பேர் பலத்த காயமடைந்தனர்.

பெங்களூரு சர்ச் சாலையில் உள்ள தனியார் ஹோட்டல் முன் நடைபாதையில் இருந்த பூந்தொட்டியில் இரவு 8.30 மணியளவில் அந்தக் குண்டு வெடித்தது. அப்போது, அந்த வழியாக நடந்து சென்று கொண்டிருந்த மூவருக்கு தலை, காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

அவர்களில் ஒருவர் சென்னையைச் சேர்ந்த பவானிதேவி (32). மற்ற இருவர் அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (22), சந்தீப் (33) எனத் தெரிய வந்தது. மூவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில், மருத்துவமனையில் பவானிதேவி உயிரிழந்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் காவல் ஆணையர் ரெட்டி கூறியது:

பயங்கரவாத அமைப்பின் சுட்டுரை கணக்கை இயக்கிய மெஹ்தியின் கைது நடவடிக்கையைத் தொடர்ந்து, இந்தக் குண்டு வெடிப்புச் சம்பவம் நடந்துள்ளதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சந்தேகத்தின் பேரில் 3 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார் அவர்.

இதனிடையே, குண்டு வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்த ஹோட்டல் முன் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில், இரவு 7.30 மணியளவில் அங்குள்ள நடைபாதையில் மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேரில் இருவர் மர்மப் பொருளைக் கொண்டு வந்து அங்குள்ள பூந்தொட்டியில் வைத்துச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.

இதையடுத்து, மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேரின் விவரங்களை போலீஸார் சேகரித்து வருகின்றனர்.

அண்மையில் மத்தியப் பிரதேசத்தில் உள்ள சிறையிலிருந்து தப்பிய சிமி அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்தக் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

முதல்வரிடம் ராஜ்நாத் சிங் பேச்சு: இந்நிலையில், குண்டு வெடிப்புச் சம்பவம் குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை இரவு தொலைபேசியில் பேசினார்.

கர்நாடகத்துக்குத் தேவையான உதவிகள் அனைத்தையும் மத்திய அரசு வழங்கத் தயாராக உள்ளது என்று சுட்டுரை (டுவிட்டர்) பக்கத்தில் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

-http://www.dinamani.com

TAGS: