தருண் விஜய்க்கு “திருக்குறள் தூதர்’ விருது

  • மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநிலங்களவை பாஜக உறுப்பினர் தருண் விஜய்க்கு
  • மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநிலங்களவை பாஜக உறுப்பினர் தருண் விஜய்க்கு “திருக்குறள் தூதர்’ விருதை வழங்குகிறார் மலேசிய இந்திய காங்கிரஸ் தலைவர் டத்தோ எஸ். சாமிவேலு.

தமிழுக்காக நாடாளுமன்றத்திலும், வட மாநிலங்களிலும் குரல் கொடுத்து வரும் உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மாநிலங்களவை பாஜக உறுப்பினர் தருண் விஜய்க்கு, மலேசியாவில் உள்ள தமிழ் எழுத்தாளர்கள் அமைப்பு “திருக்குறள் தூதர்’ விருதை ஞாயிற்றுக்கிமை வழங்கி கௌரவித்தது.

திருக்குறளுக்கும், தமிழுக்கும் அவர் ஆற்றிவரும் பணியைப் பாராட்டும் விதமாக அவருக்கு “திருக்குறள் தூதர் விருது’ வழங்க மலேசியாவில் உள்ள “பெர்சாத்துவான் பெனுலிஸ் பெனுலிஸ் தமிழ் மலேசியா’ எனும் தமிழ் எழுத்தாளர்கள் அமைப்பு முடிவு செய்தது. அதன்படி, மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தருண் விஜய்க்கு “திருக்குறள் தூதர்’ விருதை மலேசிய இந்திய காங்கிரஸ் (ம.இ.கா) தலைவர் டத்தோ எஸ். சாமிவேலு வழங்கினார்.

அவர் பேசுகையில், “தமிழையும், திருவள்ளுவரையும், திருக்குறளையும் பல இடங்களுக்கு கொண்டு செல்வதில் தருண் விஜய் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கான ஒரு மாவீர அரசராக உருவாகியுள்ளார். தமிழுக்கான உங்களது அனைத்துவித பங்களிப்புகளை நாங்கள் மதிக்கிறோம். பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் இந்தியா வேகமான வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அவருடைய வருகைக்காக மலேசியா காத்திருக்கிறது. அவரது வருகை வரலாற்றுச் சிறப்புமிக்கதாக அமையும்’ என்றார்.

தருண் விஜய் எம்.பி. தனது ஏற்புரையில் கூறியதாவது: “புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் நேசமும், வாஞ்சையும் வாழ்க்கையை மாற்றக்கூடிய அனுபவத்தை எனக்கு அளித்துள்ளது. தமிழின் மேம்பாட்டுக்கு என்னாலான அனைத்துப் பணிளையும் செய்வேன். இந்தியாவின் வடக்கு மற்றும் தெற்கின் ஒற்றுமைக்கான மாபெரும் இலக்கியச் சின்னங்களை மேம்படுத்த தொடர்ந்து பாடுபடுவேன்.

இந்திய தத்துவவியலின் மிகப்பெரிய சின்னமாகத் திகழும் திருவள்ளுவர் பற்றி இதுவரை வட இந்தியாவில் அறிமுகப்படுத்தாமல் இருந்தது துரதிருஷ்டவசமாகும். வட இந்தியா முழுவதும் திருவள்ளுவர் பிறந்த தினத்தைக் கொண்டுவதற்கான சாத்தியத்தை ஏற்படுத்திய பெருமை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகிய இருவரையுமே சாரும். பிரதமர் நரேந்திர மோடி எப்போதும் திருவள்ளுவருக்கும், பாரதிக்கும் மிகப்பெரிய மரியாதை அளித்து வருபவர்’ என்றார் தருண் விஜய்.

இந்நிகழ்ச்சியில் குமரன், டத்தோ சகாதேவன், டத்தோ எஸ். பிரகதீஸ் குமார், தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் கே.கருணாகரன், மலாயா  பல்கலைக்கழக பேராசிரியர் மன்னர் மன்னன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

-http://www.dinamani.com

TAGS: