தமிழினப் படுகொலை நடத்திய ராஜபக்சவின் செல்வாக்கை உயர்த்த பாஜக முயற்சி! ராஜா குற்றச்சாட்டு

rajah-02.gifஇலங்கையில் அதிபர் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், இந்தியாவில் இழந்து வரும் அவரது செல்வாக்கை தூக்கி நிறுத்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா குற்றம்சாட்டினார்.

இது குறித்து திருவனந்தபுரத்தில் உள்ள அவர், தமிழக நாளிதழ் ஒன்றின் நிருபரிடம் திங்கட்கிழமை தொலைபேசியில் கூறியதாவது:

இலங்கையில் அடுத்த மாதம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நேரத்தில், ராஜபக்சவின் செல்வாக்கை தூக்கி நிறுத்த நம் நாட்டில் முயற்சி நடந்து வருகிறது.

மக்களவைத் தேர்தலின் போது, பாஜகவுக்காக சமூக ஊடகங்களில் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்ட தகவல் தொழில்நுட்பக் குழுவினர், மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரசாரங்களுக்காக உதவி வருவதாக சில தினங்களுக்கு முன்பு செய்தி வெளியானது.

அச்செய்தியை இரு தரப்பும் இதுவரை மறுக்கவில்லை. இதன் தொடர்ச்சியாக தற்போது தமிழகத்திலும் ராஜபக்சவின் செல்வாக்கை நிலைநிறுத்த தொலைக்காட்சி ஊடகம் மறைமுகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது கவலை அளிக்கிறது.

இலங்கை அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடனேயே, மகிந்த ராஜபக்சவுக்கு நமது நாட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவிக்கிறார். அண்டை நாட்டில் தேர்தல் முடிந்து அதிபராகப் பதவியேற்கத் தேர்வான பிறகு இந்த வாழ்த்தை மோடி தெரிவித்திருந்தால் பரவாயில்லை.

ஆனால், தேர்தலில் போட்டியிடும் மகிந்த ராஜபக்சவுக்கு முன்கூட்டியே நரேந்திர மோடி மீண்டும் வெற்றி பெற வாழ்த்துத் தெரிவிக்கிறார். இதிலிருந்தே மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசு மகிந்த ராஜபக்சவுடன் கூட்டுச் சேர்ந்துள்ளது தெளிவாகிறது.

தமிழக மக்களுக்கு நான் எதிரானவன் அல்ல என்று கூறிக் கொள்ளும் மகிந்த ராஜபக்ச, 2009ல் நடந்த போரின் போது என்ன செய்தார்? என்பதை உலகம் இன்னும் மறந்து விடவில்லை.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான சண்டை என்ற பெயரில் குண்டு மழை பொழிந்து தமிழினத்தை கொத்துக் கொத்தாகக் படுகொலை செய்யக் காரணமாக இருந்தவர் மகிந்த ராஜபக்ச.

அவரது தலைமையிலான அரசின் நடவடிக்கையையும், இராணுவத்தின் செயல்பாட்டையும் “திட்டமிட்ட படுகொலை’ என உலக நாடுகள் மட்டுமின்றி, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் குழுவும் கண்டித்துள்ளது.

தமிழர்களுக்கு எதிரானவன் அல்ல’ என்று ராஜபட்ச கூறுவதில் உண்மை இருக்குமானால், அந்த நாட்டில் உள்ள தமிழ் மக்களின் நிலங்களை அத்துமீறி கையகப்படுத்தியுள்ள இலங்கை இராணுவத்தினரை ராஜபக்ச வெளியேற்ற ஏன் தயக்கம் காட்டுகிறார்?

எனவே, மகிந்த ராஜபக்சவின் முயற்சிகளை அந்நாட்டு அதிபரின் தேர்தல் கால சாகசமாகவே பார்க்கிறோம்.

இந்த முயற்சிகளுக்கு இந்தியாவில் உள்ள சிலரும் உதவி வருவதுதான் வேதனைக்குரிய விஷயம்.

இத்தகைய முயற்சிகள் மூலம் சரித்திரத்தில் இடம்பெற்ற பிழைகளை மறைத்து விட முடியாது.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப் படுகொலைகளுக்குச் சரித்திரம் தொடர்ந்து நீதி கேட்கும் என்றார் ராஜா.

-http://www.tamilwin.com

பெரும்பான்மையான தமிழர்கள் ஜனாதிபதி மஹிந்தவை ஆதரிக்கின்றனர்: சுப்ரமணியம் சுவாமி

subramaniyan_002பெரும்பான்மையான தமிழர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை ஆதரிப்பதாக இந்திய பாரதீய ஜனதா கட்சியின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இந்திய ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் வாழ்ந்து வரும் பெரும்பான்மை இந்து தமிழர்கள் ஜனாதிபதி மஹிந்தவை ஆதரிக்கின்றார்கள்.

mahinda_rajapaksaஇலங்கை தமிழ் மக்கள் ஜனாதிபதி மஹிந்தவை மீளவும் ஜனாதிபதியாக்கினால், அதிகாரப் பகிர்வு தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு காத்திரமான பங்களிப்பினை வழங்க முடியும்.

எனவே தமிழ் மக்கள் ஜனாதிபதி மஹிந்தவிற்கு வாக்களிக்க வேண்டும் என சுப்ரமணியம் சுவாமி கோரியுள்ளார்.

கடந்த காலங்களிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்காக சுப்பரமணியம் சுவாமி குரல் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

–http://www.tamilwin.com

TAGS: