இடுக்கி அணையின் கேட்டை தொடக்கத்திலேயே உணர்ந்தவர் கோமதிநாயகம் என்று உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் கூறினார்.
திருச்சியில் இலக்கியச் சுற்றம் சார்பில் “தண்ணீர் அரசியல்’ என்ற தலைப்பில் திங்கள்கிழமை நடைபெற்ற பாசனப் பொறியியல் வல்லுநர் முனைவர் பழ. கோமதிநாயகம் நினைவுச் சொற்பொழிவில் அவர் பேசியது:
முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீரை குறைவாகத் தேக்குவதன் மூலம் அந்தத் தண்ணீரைத் திருப்பி இடுக்கி அணையில் மின்சாரம் தயாரிப்பதுதான் கேரள அரசின் திட்டம். இதை முதன்முதலில் கண்டறிந்து என்னிடம் சொன்னவர் தம்பி கோமதிநாயகம்.
தமிழக சட்டப்பேரவையில் இதைப் பேசினேன். முதல்பக்கச் செய்தியானது. போராட்டங்கள் நடைபெற்றன. வழக்குகள் நடைபெற்றன. 35 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் ஓரளவு வெற்றி கிடைத்துள்ளது. இதற்கு அடித்தளம் அமைத்தவர் பழ. கோமதிநாயகம்.
ஆற்றுநீர் சிக்கலாகியிருக்கிறது, ஏரி இருந்த இடம் தெரியவில்லை, நிலத்தடி நீர் உறிஞ்சப்படுகிறது, மழை தரும் காடுகளை அழித்துக் கொண்டே இருக்கிறோம்.
கேரள ஆறுகளில் இருந்து ஆண்டுதோறும் 3,000 டிஎம்சி தண்ணீர் வீணாகக் கடலில் கலக்கிறது. அதில், 80 சதவீதம் தண்ணீரை நமக்குத் திருப்பிவிட்டால் ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்கள் வளம் கொழிக்கும். மறுக்கிறார்கள்.
மாநிலப் பிரச்னையாக இருப்பது, நாடுகளுக்கு இடையேயான பிரச்னையாக மாறும்போதுதான் தீர்க்கப்படுமா? காவிரி, முல்லைப் பெரியாறு விவகாரங்களில் வஞ்சனையால் தனிநாடு என்ற விதையை எங்களுக்குள் விதைத்துவிட்டவர்கள் நீங்கள்தான்.
அண்டை மாநிலங்களுக்கு இடையேயான உரிமை நிலைநாட்டப்பட வேண்டும், அநீதிகளைத் தட்டிக் கேட்கும் துணிவு வேண்டும். இந்த இரண்டும் கடந்த 40 ஆண்டுகால தமிழக வரலாற்றில் இல்லை. இதனால் பல இழப்புகளுக்கு ஆளாகியிருக்கிறோம் என்றார் பழ. நெடுமாறன்.
மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் துணைத் தலைவர் கண. குறிஞ்சி, தமிழக பசுமை இயக்கத் தலைவர் டாக்டர் வி. ஜீவானந்தம் உள்ளிட்டோர் பேசினர்.
சொற்பொழிவுக்கு இலக்கிய விமர்சகர் வீ.ந.சோமசுந்தரம் தலைமை வகித்தார். இலக்கியச் சுற்றத்தின் அமைப்பாளர் பத்திரிகையாளர் எம். பாண்டியராஜன் தொகுத்து வழங்கினார்.
-http://www.dinamani.com