தமிழர் வாக்குகளால் வென்ற மைத்ரிபால சிறிசேனா பொதுவாக்கெடுப்பு நடத்த முன்வர வேண்டும் :வேல்முருகன்

Velmurugan_tvkதமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:

’’இலங்கையின் அரச தலைவர் தேர்தலில் ஒன்றரை லட்சம் ஈழத் தமிழ் சொந்தங்களைப் படுகொலை செய்த 21-ம் நூற்றாண்டின் மிகப் பயங்கர கொடுங்கோலன் இனப்படுகொலையாளன் ராஜபக்சே வீழ்த்தப்பட்டுவிட்டான்.

ராஜபக்சேவின் இன ஒடுக்குமுறைக்கு எதிராக அமைதி வழியில் தமிழர் தாயகப் பிரதேசத்தில் தங்களது வாக்குகளை செலுத்தி சர்வதேச சமூகத்துக்கு தமிழர் தரப்பின் நிலைப்பாடு இதுவே என்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் புதிய அரச தலைவராக மைத்ரிபால சிறிசேன பொறுப்பேற்க இருக்கிறார். அரச தலைவர் தேர்தலில் வென்றுவிட்டாலும் ராஜபக்சேவுக்கும் மைத்ரிபாலவுக்கும் பெரிய வேறுபாடு எதுவும் இல்லைதான். இருவருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.. ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்தான்..

இருப்பினும் ஈழத் தமிழர் வாக்குகளால் மட்டுமே இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றிருக்கும் மைத்ரிபால சிறிசேன, ராஜபக்சே வழியில் செல்லாமல் தமிழரின் நியாயமான அரசியல் விருப்பங்களை மதித்து நடக்க வேண்டும்.

ஈழத் தமிழினத்துக்கான சுய நிர்ணய உரிமையை அங்கீகரித்து அவர்கள் விரும்புகிற அரசியல் தீர்வை அடைவதற்காக ஐக்கிய நாடுகள் அவை மூலமாக பொதுவாக்கெடுப்பு நடத்துவதற்கான நடவடிக்கைகளை மைத்ரிபால சிறிசேன மேற்கொள்வதுதான் தமக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு அவர் செய்யப் போகிற முதன்மையான நன்றிக் கடனாக இருக்கும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.

ஒட்டுமொத்தமாக ஈழத் தமிழினம் ஒன்று திரண்டு தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளதை உணர்ந்தும் மதித்தும் தமிழர் தாயகப் பிரதேசத்தில் ஆக்கிரமித்து நிற்கும் ராணுவத்தினரை விலக்க வேண்டும்; தமிழீழத் தலைவர்களான பேபி சுப்பிரமணியம், பாலகுமாரன், யோகி மற்றும் பல்லாயிரக்கணக்கான தமிழர் நிலை என்ன என்பது குறித்து புதிய இலங்கை அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன பகிரங்கப்படுத்த வேண்டும்.

தமிழினப் படுகொலை குறித்து விசாரணை நடத்த ஐக்கிய நாடுகள் அவையத்தின் மனித உரிமைகள் ஆணைக் குழுவை அனுமதித்து தமக்கு வாக்களித்த தமிழருக்கான நீதியை நிலைநாட்டுவதற்கு மைத்ரிபால சிறிசேன முன்வர வேண்டும் என்பதே தமிழர்களின் எதிர்பார்ப்பாகும்.

மேலும் இலங்கை அரச தலைவர் தேர்தலில் படுதோல்வி அடைந்துவிட்டான் ராஜபக்சே என்பதோடு நமது பணி முடிந்துவிடவில்லை. இத்தனை கொடூரங்களை அரங்கேற்றிய ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தி போர்க்குற்றங்களுக்கான உச்சபட்ச தண்டனையை பெற்றுத் தரும் வரை உலகத் தமிழ்ச் சமூகத்தின் பணி ஓய்ந்துவிடாது.

இதுவரை அரச தலைவர் என்ற நாற்காலியில் அமர்ந்து கொண்டு சர்வதேச சமூகத்துக்கு கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருந்த ராஜபக்சேவுக்கு போர்க்குற்றங்களுக்கான தண்டனை பெற்றுத் தருவதற்கான அத்தனை நடவடிக்கைகளையும் உலகத் தமிழ்ச் சமூகம் ஒருங்கிணைந்து விரைவுபடுத்துவோம் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.’’

-http://www.nakkheeran.in

TAGS: