சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியை வேறு இடத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதை கண்டித்து, சட்டக் கல்லூரி மாணவர்கள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கோவை
கோவையிலும் சட்டக் கல்லூரி மாணவர்களின் போராட்டம் இன்று நடந்தது. இன்று காலை 11.30 மணி அளவில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கோவை ஜி.பி. சிக்னலில் குவிந்தனர்.
திடீரென ரோட்டில் அமர்ந்து மறியலிலும், ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து சட்டக் கல்லூரி மாணவர்களை பொலிசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்து வேனில் கொண்டு சென்றனர். சுமார் 6 வேன்களின் 200-க்கும் மேற்பட்டவர்கள் ஏற்றி கொண்டு செல்லப்பட்டனர்.
அதில் ஒரு வேனில் இருந்த சட்டக் கல்லூரி மாணவர்கள் அந்த வேனின் கண்ணாடியை உடைத்தனர்.
நெல்லை
நெல்லையில் இன்று காலை சட்டக்கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து நெல்லை-திருச்செந்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் மாற்று பாதையில் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன. சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பின்பு அவர்கள் மறியலை கைவிட்டனர்.
சேலம்
சேலம் கோரிமேடு அருகில் உள்ள தனியார் சட்டக் கல்லூரி முன் மாணவர்கள் சிலர் திடீர்ரென ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சேலம் அரசு கல்லூரி மாணவர்களில் சிலர் இன்று காலை மாணவர் கார்த்திக் தலைமையில் வகுப்பை புறக்கணித்து விட்டு கல்லூரி முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். மற்ற மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருக்க கல்லூரி மெயின் கேட்டை ஆசிரியர்கள் இழுத்து பூட்டினர்.
புதுவை
புதுவை சட்டக் கல்லூரி மாணவர்கள் இன்று காமராஜர் சிலை அருகே சாலை மறியல் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் சாலையில் அமர்ந்து வாகனங்களுக்கு வழிவிடாமல் மறியல் செய்தனர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து பொலிசார் மறியலில் ஈடுபட்ட சட்ட கல்லூரி மாணவர்கள் 41 பேரை கைது செய்தனர்.
திருச்சி
திருச்சி, வேலூர் காட்பாடி ஆகிய இடங்களிலும் சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-http://www.newindianews.com

























