இந்தியர்களின் சகிப்புத் தன்மையை வேற்றுமைகள் பாதிக்காது: அருண் ஜேட்லி

இந்தியர்களின் சகிப்புத் தன்மையை மதம், ஜாதி உள்ளிட்ட எந்த வேற்றுமைகளும் பாதிக்காது என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.

இந்தியா குறித்த ஒபாமாவின் கண்ணோட்டத்துக்கு பதிலளிக்கும் வகையில் இந்தக் கூற்றினை அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ஒபாமா கடந்த மாதம் மூன்று நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்திருந்தார். அப்போது அவர், “மத ரீதியாக இந்தியா பிளவுபடாத வரை அது வெற்றிப் பாதையில் செல்லும்’ எனப் பேசியிருந்தார்.

இந்த விவகாரம் அப்போதே இந்திய அரசியல் கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், “சமீப காலமாக இந்தியாவில் மதச் சகிப்புத்தன்மை இல்லாத நிலைமையைக் கண்டிருந்தால் மகாத்மா காந்தியே அதிர்ச்சியடைந்திருப்பார்’ என வாஷிங்டனில் கடந்த வியாழக்கிழமை அதிபர் ஒபாமா கருத்து தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, தில்லியில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொண்டால் அனைத்து சமூகங்களிலும் சகிப்புத் தன்மை நிலவும். கலாசார சகிப்புத் தன்மையில் இந்தியாவுக்கு மிக நீண்ட வரலாறு உண்டு. எந்த வேற்றுமையும் இந்தியர்களின் சகிப்புத் தன்மையை பாதிக்காது.

அண்மையில் அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சியில் அதிபர் ஒபாமாவுக்கு அருகே அமர்ந்திருந்த தலாய் லாமாவே சகிப்புத் தன்மைக்கு மிகச் சிறந்த உதாரணமாக விளங்குபவர். அவரே இந்தியாவில் தங்குவதை சௌகரியமாக உணர்கிறார். இங்கு அவர் தங்குவதை இந்தியாவும் சௌகரியமாகக் கருதுகிறது என அருண் ஜேட்லி தெரிவித்தார்.

இதனிடையே, உத்தரகண்டில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில், “மதச் சகிப்புத்தன்மை ஒன்றே இந்தியாவின் மிகச் சிறந்த அம்சமாகும். உலகிலேயே இந்தியாவில் மட்டும்தான் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர். அதிலும், இஸ்லாமியர்களில் பல பிரிவினரும், கிறிஸ்தவர்களில் பல பிரிவினரும் இங்கு ஒற்றுமையுடன் இருக்கிறார்கள். இந்தியர்களுக்கு மதம், இனம் என எந்தப் பாகுபாடும் கிடையாது’ என்றார்.

-http://www.dinamani.com

TAGS: